தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி ஓய்வுபெறுகிறார். மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சுஷில் சுகுமாறன் அதே நாள் சிங்கப்பூரின் ஐந்தாவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்.
அதுகுறித்துப் பிரதமர் லாரன்ஸ் வோங் கருத்துரைத்துள்ளார்.
“தலைமை நீதிபதி மேனன் கடந்த 14 ஆண்டுகளாகச் சிங்கப்பூருக்குச் சிறந்த முறையில் சேவையாற்றியுள்ளார். அவருடைய தலைமையின்கீழ், நமது நீதித்துறை சிங்கப்பூரர்களின் நம்பிக்கையையும் அனைத்துலகச் சட்டச் சமூகத்தின் மதிப்பையும் பெற்றுள்ளது. அவர் ஆற்றிய உன்னதச் சேவைக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
“நீதிபதி சுஷில் நாயர் இந்த வலுவான அடித்தளங்களை மேலும் மேம்படுத்தி நமது நீதித்துறையின் சிறப்பையும் நேர்மையையும் சுதந்திரத்தையும் தொடர்ந்து நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார் திரு வோங்.
பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
திரு மேனன், 2012ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு முக்கிய உருமாற்றங்களுக்கு இடையே அவர் சிங்கப்பூரின் நீதித்துறையை வழிநடத்தியதாக அறிக்கை குறிப்பிட்டது.
திரு மேனனுடைய தலைமையின்கீழ், நீதித்துறை, அடித்தளங்களை வலுப்படுத்தியதோடு நீதியை அணுகுவதற்கான வழிகளையும் மேம்படுத்தியதாக அது தெரிவித்தது. அதேநேரம், நீதித்துறை அதன் நிர்வாகத்தை நவீனமயமாக்கியதுடன் சட்டதிட்டங்களின்மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் வலுப்படுத்தியதாக அறிக்கை சுட்டியது.
நீதிமன்றத்தின் ஆற்றல்களை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட சீர்திருத்தங்களைத் திரு மேனன் மேற்பார்வையிட்டார். மின்னிலக்க உருமாற்றத் திட்டங்களை அவர் வழிநடத்தினார். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காகப் புதிய பிரிவை நிறுவினார். மேல்முறையீடுகளைத் திறம்பட விசாரிக்கவும் அவற்றுக்குத் தீர்வுகாணவும் இது வழிவிட்டது.
சிங்கப்பூர் அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தையும் அதன் அனைத்துலகக் குழுவையும் உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார் திரு மேனன். அனைத்துலக அளவில் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய நம்பகமான நிலையமாகச் சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்த அது கைகொடுத்தது.
நீதித்துறையில் உயர்கல்வி பயில விரும்புவோருக்காகச் சிங்கப்பூர்ச் சட்டக் கல்லூரியை அவர் நிறுவினார்.
நீதிபதி சுஷில் நாயர், சென்ற ஆண்டு ஏப்ரல் முதல்தேதி நீதிமன்ற ஆணையராகப் பொறுப்பேற்றார். பின்னர் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். திரு நாயர் இவ்வாண்டு ஜூன் 15ஆம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியானார்.
நீதித்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் அவர். சட்டத் துறைக்கு அப்பால், பொதுச் சேவைத் துறையிலும் கணிசமாகப் பங்காற்றியிருக்கிறார் திரு நாயர்.

