தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிணை மறுப்பு: உறுதிசெய்த தலைமை நீதிபதி

2 mins read
0abb9ecd-95ce-4c94-a1b7-2589acc9a356
பௌலோஸ் டன்னோசை இந்தோனீசியாவுக்கு நாடு கடத்தும்படி சிங்கப்பூரிடம் இந்தோனீசியா பிப்ரவரி 24ல் அதிகாரபூர்வமாகக் கோரிக்கை விடுத்தது. - படம்: பெரித்தா ஹரியான்

இந்தோனீசியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்நாட்டைச் சேர்ந்த வர்த்தகரான 70 வயது பௌலோஸ் டன்னோஸ் ஜனவரி 17ஆம் தேதி சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார்.

பேரளவிலான ஊழல் குற்றத்தை டன்னோஸ் புரிந்ததாக இந்தோனீசியா குற்றம் சாட்டியுள்ளது. அவரது செயலால் நாட்டுக்கு ஏறத்தாழ 2.3 டிரில்லியன் ரூப்பியா (S$178 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக அது கூறியது.

டன்னோசை இந்தோனீசியாவுக்கு நாடு கடத்தும்படி சிங்கப்பூரிடம் இந்தோனீசியா பிப்ரவரி 24ல் அதிகாரபூர்வமாகக் கோரிக்கை விடுத்தது.

இருநாடுகளுக்கும் இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டது.

அந்த ஒப்பந்தப்படி ஊழல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது போன்ற குற்றங்களைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் நாடு கடத்தப்படலாம். அதிகபட்சம் 18 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த குற்றச்செயல்களுக்கு இது பொருந்தும்.

இந்தோனீசியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் தமக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை என்று இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் டன்னோஸ் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், பிறகு தமது முடிவை அவர் மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில், டன்னோஸ் பிணை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.

வியாழக்கிழமையன்று (அக்டோபர் 2) அவரது பிணை மனுவைத் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஏற்க மறுத்தார்.

டன்னோசுக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அதன் காரணமாக அவர் பிணையில் விடுவிக்கப்படலாம் என்றும் அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

அவருக்கு இதயம் தொடர்பான பிரச்சினை, நீரிழிவு நோய் ஆகியவை இருப்பதாக அவர்கள் கூறினர்.

இதன் அடிப்படையில் டன்னோசுக்குப் பிணை வழங்கினால், நாடு கடத்தும் சட்டத்தின்கீழ் வழக்கை எதிர்நோக்கும் மற்றவர்களும் இலேசான உடல்நலப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி பிணை கேட்டு விண்ணப்பம் செய்வர் என்று திரு மேனன் கூறினார். எப்படியும் ஒரு சில நாள்கள் கழித்து, அதிலிருந்து அவர்கள் குணமடைந்ததும் பிணை ரத்து செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்