குழந்தைத் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரிப்பு

3 mins read
ca2de6e4-66ca-4522-b2a4-617448b7e855
சமூகத்தில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதற்கான அறிகுறிகளைக் கண்டறிவதற்கும் விழிப்புடன் இருப்பதற்கும் குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டார், சமூகப் பங்காளிகள், பொதுமக்கள் ஆகியோரின் உதவியைச் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நாடுகிறது. - படம்: தி நியூ பேப்பர்

கடந்த 2024ஆம் ஆண்டு குழந்தைத் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகமாகப் பதிவாயின.

அத்தகைய சம்பவங்கள் நிலை 1, நிலை 2 என இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், நிலை 1 சம்பவங்கள் சமூக நிறுவனங்களால் கண்காணிக்கப்படும் குறைந்த, மிதமான இடர் கொண்டவை.

நிலை 2 சம்பவங்கள் அதிக இடர் கொண்டவை. அவை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பாதுகாப்புச் சேவைகள் பிரிவால் கையாளப்படுபவை; சட்டரீதியான தலையீடு தேவைப்படுபவை.

2023ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை நிலை 1, நிலை 2 சம்பவங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 14 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 10) வெளியிட்ட குடும்ப வன்முறைப் போக்குகள் அறிக்கை தெரிவித்தது.

சென்ற ஆண்டு குடும்ப வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இந்த உயர்வானது, முக்கியமாக குழந்தைத் துன்புறுத்தல், வாழ்க்கைத்துணை வன்முறைச் சம்பவங்களின் அதிகரிப்பால் ஏற்பட்டது என்று அமைச்சு குறிப்பிட்டது.

குழந்தைத் துன்புறுத்தல் சம்பவங்களில் நிலை 1, நிலை 2 சம்பவங்கள் பெரும்பாலும் 7 முதல் 12 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளை அதிகம் உள்ளடக்கியது.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்துக் கற்பித்தல், பொதுக் கல்வி, பணியாளர்களின் தொடர்ச்சியான பயிற்சி, கண்காணிப்பு ஆகியவை அதிக வழக்குகள் பதிவாகக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அமைச்சு நம்புகிறது.

தொடர்புடைய செய்திகள்

இதற்கிடையே, வாழ்க்கைத்துணையரால் துன்புறுத்தப்பட்ட சம்பவங்களும் சென்ற ஆண்டு அதிகரித்தன. குடும்பச் சேவை நிலையங்கள் கையாளும் சம்பவங்கள் பெரும்பாலும் சுயமாகப் பரிந்துரைக்கப்பட்டவை.

அதுபோல, மூத்தோர் மீதான புதிய நிலை 1 துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்றும் அதற்கு மூப்படைந்துவரும் சமூகமும் அதிக விழிப்புணர்வும் காரணங்களாக இருக்கலாம் என்றும் அமைச்சு கருதுகிறது.

எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பெரியவர்களுக்கான நிலை 2 சம்பவங்கள் சற்று அதிகரித்துள்ளது. அத்தகைய மூத்த குடிமக்களுக்கு எதிரான துன்புறுத்தல் சம்பவங்களுக்குப் புறக்கணிப்பு முக்கியக் காரணமாக விளங்குகிறது.

இவ்வாண்டு முற்பாதியில் குழந்தை வன்முறை நிலை 1, நிலை 2 சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகப் பதிவாகியிருந்தாலும் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நிலை 2 சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.

புதிய வாழ்க்கைத்துணை துன்புறுத்தல் சம்பவங்கள், நிலை 1 மூத்தோர் வன்முறைச் சம்பவங்கள், நிலை 2 எளிதில் பாதிக்கப்படும் நிலை உள்ள மூத்தோர் துன்புறுத்தல் சம்பவங்கள், எளிதில் பாதிக்கப்படும் நிலை உள்ள பெரியவர்கள் புறக்கணிக்கப்படும் சம்பவங்கள் இவ்வாண்டு முற்பாதியில் அதிகமாகப் பதிவாயின.

விழிப்புடன் இருக்க அறிவுறுத்து

பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் சமூகத்தில் குழந்தை வன்முறைக்கான அறிகுறிகளைக் கண்டறிவதற்கும் விழிப்புடன் இருப்பதற்கும் குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டார், சமூகப் பங்காளிகள், பொதுமக்கள் ஆகியோரின் உதவியை அமைச்சு நாடுகிறது.

குடும்ப வன்முறைச் சம்பவங்களைக் கையாள பாதுகாப்பு முறைகளை வலுப்படுத்திவரும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சட்டப் பாதுகாப்புகளை விரிவாக்குவது, 24 மணி நேர குடும்ப வன்முறை அவசரகால நடவடிக்கைக் குழுவைச் செயல்படுத்துவது, குடும்ப வன்முறைச் சம்பவங்களைக் கண்டறியும் கருவிகளை அறிமுகப்படுத்துவது, பொது விழிப்புணர்வை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

குழந்தை அல்லது குடும்ப வன்முறைச் சம்பவம் குறித்து புகார் அளிக்க 1800-777-0000 எனும் தேசிய வன்முறைத் தடுப்பு, பாலியல் துன்புறுத்தல் உதவித் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
குடும்ப வன்முறைசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுஉதவி