தலை, உடல், கை கால்களில் தோல் இன்றி பிறந்த சிறுமிக்கு அவரது சொந்த திசுக்களைக் கொண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட தோலைப் பொருத்தி சிகிச்சை அளித்துள்ளனர் சிங்கப்பூர் பொது மருத்துவமனை மருத்துவர்கள் (எஸ்ஜிஎச்).
சுமாயா என்ற அந்த சிறுமி 2020 ஆம் ஆண்டு பிறந்தபோது, அவரது உடலின் கிட்டத்தட்ட 40 விழுக்காடு பகுதியில் தோல் இல்லாமல் இருந்தது.
‘அப்லேசியா க்யூட்டிஸ் கான்ஜெனிட்டா’ என்ற அரிதான பிறவிக் குறைபாட்டினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். 10,000 பிறப்புகளில் ஒரு குழந்தைக்கு மட்டுமே ஏற்படும் இந்த நோயில், உடலின் வெளிப்புறத் தோல் அடுக்கு உருவாகாமல் மெல்லிய, வெளிப்படையான ஜவ்வு போன்ற படலம் மட்டுமே இருக்கும்.
இது குறித்து கருத்துரைத்த ‘எஸ்ஜிஎச்’ குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஆல்வின் கியாவ், “சிங்கப்பூரில் இவ்வளவு அதிகப்படியான பகுதியில் தோல் இன்றி பிறந்து உயிர் பிழைத்த ஒரே குழந்தை சுமாயா,’’ என்றார்.
மிகக் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் போலக் கவனமாகப் பராமரித்தே சிறுமியை காப்பாற்றியதாகவும் அவர் சொன்னார்.
ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட புதிய தோல்
வழக்கமாக உடலின் மற்றொரு பகுதியில் இருந்து தோலை எடுத்துப் பொருத்துவார்கள். ஆனால், சுமாயாவின் உடலில் போதுமான அளவு தோல் இல்லாததால் அது சாத்தியப்படவில்லை.
தென்கிழக்கு ஆசியாவிலேயே தீக்காயங்களுக்குப் பிரத்யேகச் சிகிச்சை அளிக்கும் வசதி கொண்ட ‘எஸ்ஜிஎச்’ மருத்துவமனை, சிறுமியின் இடுப்புப் பகுதியில் இருந்து ஒரு சிறிய தோல் திசுவை எடுத்து ஆய்வகத்தில் வைத்து 3 வாரங்கள் வளர்த்தது.
3 வாரங்களுக்குப் பிறகு ஆய்வகத்தில் வளர்ந்த தோலை அவரது உடலில் வெற்றிகரமாகப் பொருத்திச் சிகிச்சை அளித்தனர். இதற்காக 6 மாதங்கள் வரை சிறுமி தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
தற்போது நலமாக இருக்கும் சுமாயா, தொடர்ந்து தழும்பு சீரமைப்புச் சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். தலைப்பகுதியில் தோல் மட்டுமே பொருத்தப்பட்டதால் முடி வளரவில்லை. இதனால் சிறுமிக்குத் தன்னம்பிக்கை அளிப்பதற்காக அவரது தந்தையும் முடியை மழித்துள்ளார்.
2027ஆம் ஆண்டில் சுமாயா பள்ளிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், வகுப்பறைக்கு தொப்பி அணிந்து வர அனுமதிக்குமாறு கல்வி அமைச்சிற்கும் பள்ளிக்கும் மருத்துவர் கடிதம் எழுதியுள்ளார்.


