வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து, பெற்றோரும் காப்பாளர்களும் பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் (CDA) உள்ள தொகையை மூக்குக் கண்ணாடிக் கடைகளிலோ சில்லறை விற்பனை மருந்துக் கடைகளிலோ பயன்படுத்த இயலாது.
புதன்கிழமை (அக்டோபர் 1) வெளியிட்ட அறிக்கையில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
குழந்தை போனஸ் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு சிங்கப்பூர்க் குழந்தைக்கும் தொடங்கப்படும் பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் உள்ள தொகையைப் பெற்றோரும் காப்பாளர்களும் எவ்வாறு செலவிடுகின்றனர் என்பது தொடர்பில் அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் தணிக்கை மேற்கொண்டது. ஆவணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதும் அந்தத் தொகை வழக்கத்துக்கு மாறாக மூக்குக் கண்ணாடிக் கடைகளிலும் சில்லறை விற்பனை மருந்துக் கடைகளிலும் பயன்படுத்தப்பட்டதும் அதில் தெரியவந்தது.
குறுகிய காலத்தில் அடிக்கடி இவ்வாறு செலவிடப்பட்டதும் குழந்தைக்கானது இல்லை என்ற சந்தேகத்தை எழுப்பும் விதமான செலவுகளும் கண்டறியப்பட்டதாக அமைச்சு கூறியது.
அதைத் தொடர்ந்து அமைச்சு மேற்கொண்ட விசாரணையில் பிள்ளை மேம்பாட்டுக் கணக்கிலிருந்த தொகை அந்தக் குழந்தைக்கோ அதன் உடன்பிறந்த பிள்ளைகளுக்கோ அல்லாமல் பெரியவர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
சில கடைகளில் அந்தக் கணக்கிலிருந்த தொகையைப் பெற்றோர் அல்லது காப்பாளர் பணமாக மாற்றிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அவ்வாறு பணத்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை.
பிள்ளை மேம்பாட்டுக் கணக்கின் பணப் பரிமாற்றங்களைக் கண்காணித்து வருவதாகக் கூறிய அமைச்சு, அனுமதியற்ற பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது. அவ்வாறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அந்தத் தொகையை மீண்டும் அந்தக் கணக்கில் செலுத்தும்படி உத்தரவிடப்படும்.
இவ்வேளையில், இந்தக் கணக்கிலிருந்து மூக்குக் கண்ணாடிக் கடைகளிலும் சில்லறை விற்பனை மருந்துக் கடைகளிலும் தொகை பயன்படுத்திய சம்பவங்கள் மிகக் குறைவே என்றும் அமைச்சு குறிப்பிட்டது. 2024ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட மொத்தத் தொகையில் அவை முறையே 0.8 விழுக்காடு மற்றும் 0.4 விழுக்காடு என்று அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
கிட்டத்தட்ட 97.1 விழுக்காட்டுத் தொகை பாலர் பள்ளிகளிலும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களிலும் பயன்படுத்தப்பட்டதாக அமைச்சு கூறியது.
அரசாங்கம் பிள்ளை மேம்பாட்டுக் கணக்குத் திட்டத்தை 2001ஆம் ஆண்டு தொடங்கியது. பிள்ளைகளின் மேம்பாடு, கல்விக்குப் பயன்படுத்தும் வகையில் அரசாங்கம் சிறப்பு மானியத் தொகையை அதில் நிரப்பும். மேலும், பெற்றோர் அல்லது காப்பாளர் செலுத்தும் தொகைக்கு வெள்ளிக்கு-வெள்ளி என்ற அடிப்படையிலும் குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்டு, அது தொகையை நிரப்பும்.