தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறார் லைஃப்எஸ்ஜி, எடுசேவ், உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய கல்விக் கணக்கில் $500 நிரப்பப்படும்

2 mins read
bf10ad59-64e7-44d1-9c68-225926227971
2013ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்த சிறுவர்களுக்கு ஜூலை மாதம் 7ஆம் தேதி தொடங்கும் வாரத்தில் சிறார் லைஃப்எஸ்ஜி வழங்குதொகை கணக்கில் பணம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தகுதி பெறும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஜூலை மாதத்தில் சிறார் லைஃப்எஸ்ஜி வழங்குதொகை கணக்கில் அல்லது எடுசேவ் கணக்கில் அல்லது உயர்நிலைப்பள்ளிக்குப் பிந்தைய கல்விக் கணக்கில் $500 நிரப்பப்படும்.

சிங்கப்பூர் குடும்பங்களில் உள்ள 12 வயதும் அதற்கும் குறைவான வயதுடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் சிறார் லைஃப்எஸ்ஜி வழங்குதொகை கணக்கில் $500 வழங்கப்படும்.

13 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 300,000 மாணவர்களுக்கு ஒருமுறை வழங்குதொகையாக அவர்களது எடுசேவ் கணக்கில் அல்லது உயர்நிலைப்பள்ளிக்குப் பிந்தைய கல்விக் கணக்கில் தலா $500 வழங்கப்படும்.

2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஆதரவு நடவடிக்கைகளில் இந்த வழங்குதொகை அடங்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கல்வி அமைச்சும் வியாழக்கிழமையன்று (ஜூலை 3) தெரிவித்தன.

பிள்ளை வளர்ப்புச் செலவினங்களைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் வகையில் இத்தொகை வழங்கப்படுகிறது.

2013ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்த சிறுவர்களுக்கு ஜூலை மாதம் 7ஆம் தேதி தொடங்கும் வாரத்தில் சிறார் லைஃப்எஸ்ஜி வழங்குதொகை கணக்கில் பணம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டில் பிறந்த சிறுவர்களுக்கு 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வழங்குதொகை கிடைக்கும்.

கிட்டத்தட்ட 450,000 சிறுவர்கள் வழங்குதொகை பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழங்குதொகையை மளிகைப் பொருள்கள், மருந்துகள், தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணம், போக்குவரத்து போன்ற அத்தியாவசியக் குடும்பச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.

தகுதி பெறும் சிறுவர்களின் சிறார் மேம்பாட்டுக் கணக்கின் அறங்காவலரிடம் வழங்குதொகை வழங்கப்படும். லைஃப்எஸ்ஜி விண்ணப்பத்தில் உள்ள மின்பணப்பை மூலம் பணம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பம் செய்யத் தேவையில்லை. மின்பணப்பையில் பணம் போடப்பட்டதும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்கப்படும்.

தகுதிபெறும் மாணவர்களின் எடுசேவ் கணக்கில் அல்லது உயர்நிலைப்பள்ளிக்குப் பிந்தைய கல்விக் கணக்கில் $500 நிரப்பப்பட்டதும் அவர்களது பெற்றோருக்குக் குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்கப்படும்.

அரசாங்கத்தின் வருடாந்தர எடுசேவ் பங்களிப்புடன் இந்த நிரப்புதொகைகளும் வழங்கப்படுகின்றன.

வயது ரீதியில் சற்று பெரிய பிள்ளைகளின் கல்வி தொடர்பான செலவுகளைச் சமாளிக்க இவை வழங்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்