முழுநேர தேசியச் சேவையாளர் ஒருவர் தனது மின்னணுக் கருவிகளில் சிறார் ஆபாசப் படங்கள் வைத்திருந்தது, சமூக வலைத்தளங்களில் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்தது ஆகியவற்றுக்காக 12 மாதங்கள் சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ள அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முகமது டேனியல் ரஃபியுதீன் முகமது ரஷீது எனும் அந்த 20 வயது ஆடவர், நன்னடத்தைக் கண்காணிப்புக்குத் தகுதியற்றவர் என்று கருதப்படுவதால் சீர்திருத்தப் பயிற்சிக்கு உத்தரவிடப்பட்டது.
தடுப்புக் காவல் நிலையத்தில் அவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆலோசனை அமர்வுகளுக்கு அவர் செல்ல நேரிடலாம்.
கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, டேனியல் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
அவர் தனது ‘ஐபேட்’, திறன்பேசி இரண்டிலும் ஆபாசக் காணொளிகளை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
புதன்கிழமை (மே 6) அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டபின், டேனியல் தன் நன்னடத்தைக் கண்காணிப்பு அதிகாரியிடம் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்ததாக அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவருக்குத் தனது நடத்தை குறித்த வருத்தமோ, தான் செய்த தவற்றுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் தன்மையோ இல்லை என்பதை இது காட்டுவதாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.
தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தனது மகனுக்குக் குறைவான தண்டனை விதிக்கும்படி டேனியலின் தந்தை கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
டேனியல் செய்திருப்பது தீவிரமான குற்றம் என்பதை அறிந்திருப்பதாகக் கூறிய அவர், மகன் பிணையிலிருக்கும்போது மீண்டும் தவறு செய்யாமலிருப்பதை உறுதிசெய்யும் வகையில் எப்போதும் அவருடன் இருக்கவும் உறுதியளித்தார்.
இருப்பினும் டேனியல் மீண்டும் தவறு செய்யாமலிருப்பதை உறுதிசெய்ய இந்தச் சீர்திருத்தப் பயிற்சி அவசியம் என்று நீதிபதி கூறினார். நீதிமன்ற ஆலோசகரிடம் பேசும்படி டேனியலின் குடும்பத்தாருக்கு அவர் உத்தரவிட்டார்.