சிறார் பாலியல் குற்றம்; விழிப்புடன் இருக்கப் பெரியவர்களுக்கு அறிவுரை

சிறார் பாலியல் குற்றம்; விழிப்புடன் இருக்கப் பெரியவர்களுக்கு அறிவுரை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2026 - 7:15 pm

2 mins read

சிறார்கள் தங்களை யாரேனும் தவறான முறையில் தொட்டால் எளிதில் உணர்ந்து கொள்ளமாட்டார்கள் என்பதால், பெரியவர்கள் விழிப்புடன் செயல்பட்டு அவற்றைக் கண்டறிய வேண்டும் எனக் குழந்தை நலன் ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் பாதுகாப்புக் கவலைகள் நிறைந்த பிரிவு-2 சிறார் துன்புறுத்தல் சம்பவங்கள் 1,917 ஆகப் பதிவாகின. அது 1,000 பிள்ளைகளுக்கு 2.3 சம்பவங்கள் என்ற விகிதமாகும்.

அதில் உடல்ரீதியான துன்புறுத்தலே அதிகம் காணப்பட்டது. 7 முதல் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

மேலும், குறைந்த அல்லது மிதமான கவலைகளைக் கொண்ட பிரிவு-1 சம்பவங்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 3,918 ஆகவும் 2024 ஆம் ஆண்டில் 4,527 ஆகவும் இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு அது 4,686 ஆக உயர்ந்துள்ளது.

பள்ளிக்குப் பிந்தைய பராமரிப்பு நிலையத்திலும் வீட்டிலும் 11 சிறுவர்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்த 30 வயது ஆசிரியர் உதவியாளருக்கு 2022ஆம் ஆண்டு 42 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

தெற்கு ஆஸ்திரேலியக் கூட்டுப் படையினரின் எச்சரிக்கையின் பேரிலேயே அவர் பிடிபட்டார்.

“பிள்ளைகள் தங்களைச் சுற்றியுள்ள பெரியவர்களை இயல்பாகவே நம்புவார்கள். அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று,” ஃபெய் யூவே சிறுவர் பாதுகாப்பு சிறப்பு நிலையத்தின் தலைமை ஆலோசகர் இங் சூக் வாய் வலியுறுத்தினார்.

ஒரு ஊழியர் பிள்ளைக்குப் பரிசளிப்பது, தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற எல்லைமீறும் நடத்தைகளைக் கண்டால் உடனடியாகத் தலையிட வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சமூக ஊடகங்களில் ஊழியர்கள் சிறுவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதைத் தடை செய்வது போன்ற தெளிவான எல்லைகளைப் பள்ளிகள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என குளோரியா ஜேம்ஸ்-சிவெட்டா கோ நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர் கெவின் லியூ கூறினார்.

மூடிய அறைகளில் குறைந்தது இரண்டு பெரியவர்களோ அல்லது ஒரு குழுவாகப் பிள்ளைகளோ இருப்பதை உறுதிசெய்யும் ‘மூவர் விதி’யை அமைப்புகள் பின்பற்றலாம் என ஃபெய் யூவேயின் உதவி இயக்குநர் ரேச்சல் சூ பரிந்துரைத்தார்.

முறையான புகாருக்காகக் காத்திருக்காமல், சந்தேகத்திற்கிடமான நடத்தைகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவது மிகவும் அவசியமாகும் என்று நிபுணர்கள் வலியுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்
துன்புறுத்தல்பாலியல்சிறுவர்