குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை டிசம்பரில் அறிமுகம்

2 mins read
94c8e0b3-a9e2-4651-9513-0650bcb26186
குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவையைப் பெற இரண்டு மாதங்களிலிருந்து 18 மாதக் குழந்தைகள் உள்ள பெற்றோர், எடுநேனி பை பட்லர் (EduNanny by Butler), கிடிபிலிஸ் (Kidibliss), நேனிபுரோ கேர் (NannyPro Care) ஆகிய நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை டிசம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது.

மூன்று நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன.

இதன்மூலம் குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்குப் பதிலாகப் பெற்றோருக்கு மற்றொரு தெரிவு வழங்கப்படுகிறது.

குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவையைப் பெற இரண்டு மாதங்களிலிருந்து 18 மாதக் குழந்தைகள் உள்ள பெற்றோர், எடுநேனி பை பட்லர் (EduNanny by Butler), கிடிபிலிஸ் (Kidibliss) , நேனிபுரோ கேர் (NannyPro Care) ஆகிய நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளலாம்.

குழந்தைகள் சிங்கப்பூரர்களாக இருக்க வேண்டும்.

இந்த அறிமுகத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு நடத்தப்படும்.

இத்திட்டம் குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவேலிங் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் கட்டுப்படியான விலையில், பாதுகாப்பான, நம்பகமான சேவையை வழங்குவதே இத்திட்டத்தின் இலக்கு என்று குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு நவம்பர் 21ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.

இச்சேவையை வழங்கும் ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் ஒன்றிலிருந்து மூன்று குழந்தைகளைப் பார்த்துக்கொள்வர்.

குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை வழங்குபவர்கள் தங்கள் வீடுகளில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வர்.

ஆனால் பெற்றோருக்கு சௌகரிமாக இருக்க வேண்டும் என்பதற்காக சமூக இடங்களில் இச்சேவையை வழங்குவது தொடர்பாகச் சோதனைத் திட்டம் நடத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தெம்பனிஸ் ஈஸ்ட் சமூக நிலையமும் நீ சூன் சமூக நிலையமும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை இந்தச் சமூக இடங்களில் நடத்தப்படும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவையில் 2025ஆம் ஆண்டின் முற்பாதியில் பதிவு செய்துகொள்ளலாம்.

ஒரு வாரத்தில் எத்தனை நாள்களுக்கு இச்சேவை தேவைப்படும் என்பதை பெற்றோர் முடிவு செய்யலாம்.

ஐந்து மணி நேர சேவை அல்லது பத்து மணி நேர சேவையைப் பெற்றோர் தேர்ந்தெடுக்கலாம்.

பொது விடுமுறைகளைத் தவிர்த்து, திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் சேவை வழங்கப்படும்.

இந்த நேரங்களில் வழங்கப்படும் சேவைக்கான கட்டணத்துக்கு மானியம் வழங்கப்படும்.

ஐந்து மணி நேர சேவைக்கு $16.50 கட்டணமும் பத்து மணி நேர சேவைக்கு $33 கட்டணமும் செலுத்த வேண்டும்.

ஒரு நாளுக்குப் பத்து மணி நேர சேவையைத் (வாரத்துக்கு ஐந்து நாள்கள்) தேர்ந்தெடுக்கும் பெற்றோர் மாதத்துக்கு (நான்கு வாரங்கள்) $719.40 கட்டணம் செலுத்த வேண்டும்.

குறிப்புச் சொற்கள்