பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் $400 நிரப்புதொகை: அமைச்சுகள் அறிவிப்பு

பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் $400 நிரப்புதொகை: அமைச்சுகள் அறிவிப்பு

2 mins read
7a1b6421-c4e6-4352-bbe8-3112ea61eb65
நிரப்புதொகை பிள்ளை மேம்பாட்டுக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆறு வயதுக்குட்பட்ட சிங்கப்பூர் பிள்ளைகளின் ‘பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் (சிடிஏ)’ ஒரு முறை நிரப்புதொகையாக $400 செலுத்தப்படும் என நிதி அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் திங்கட்கிழமை விடுத்த கூட்டறிக்கையில் தெரிவித்தன.

இதன்மூலம் 240,000 பிள்ளைகள் பயனடைவார்கள் எனவும் இது 2022ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட நிரப்புதொகையைவிட இருமடங்கு அதிகம் எனவும் அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தொகை பிள்ளைகளின் ‘சிடிஏ’ கணக்கில் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிள்ளைகளுக்கான ‘சிடிஏ’ கணக்கை இன்னும் தொடங்காத பெற்றோர்கள் அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் கட்டாயம் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தை வளர்ப்பில் ஏற்படும் செலவினங்களைச் சமாளிக்க குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு அளிக்கும் நோக்கில், 2023ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின்போது அறிவிக்கப்பட்ட உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த ‘சிடிஏ’ நிரப்புதொகை என்று அவ்வறிக்கை தெரிவித்தது.

‘சிடிஏ’ நிதியைக் குழந்தைகளின் கல்வி, சுகாதாரச் செலவினங்களுக்குப் பெற்றோர் பயன்படுத்தலாம்.

நிரப்புதொகை கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு அது குறித்து குறுஞ்செய்தி, மின்னஞ்சல், கடிதம் மூலம் தகுதியான சிடிஏ பெறுநர்களுக்குத் தெரிவிக்கப்படும் எனவும் மாதாந்திர சிடிஏ அறிக்கையைப் பார்ப்பதன் மூலம் கணக்கில் இருக்கும் இருப்புத்தொகை குறித்து பெற்றோர்கள் தெரிந்துகொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிடிஏ’ பெறுநர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் ‘எம்எஸ்எஃப்’ என்ற குறுஞ்செய்தி முகவரியிலிருந்து அனுப்பப்படும் என்றும் பிள்ளையின் ‘சிடிஏ’ கணக்கில் வரவு வைக்கப்படும் நிரப்புதொகை குறித்த தகவல்கள் மட்டுமே அந்தக் குறுஞ்செய்தியில் இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பின்பற்றுவது மூலம் பெற்றோர்கள் மோசடிக்காரர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்