தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிட்டப்பார்வை உள்ள பிள்ளைகளுக்கு உரிய மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படவில்லை

1 mins read
63a0d37a-7750-49d0-9cfc-5025671f1014
மையோப்பியா அல்லது கிட்டப்பார்வைக் குறைபாடு உள்ளோருக்குச் சிறப்பு மூக்குக்கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.  - படம்: சிங்கப்பூர்த் தேசியக் கண் நிலையம், மையோப்பியா நிலையம்

மையோப்பியா எனும் கிட்டப்பார்வைக் குறைபாட்டைக் குறைக்கும் சிறப்பு மூக்குக்கண்ணாடிகளுக்குப் பதிலாக பிள்ளைகளுக்கு சாதாரண கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ள விவகாரம் கண்டறியப்பட்டுள்ளது.

அதையடுத்து, பதிவுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட 2,800 மருத்துவர்களுக்கு கண் மருத்துவர் வாரியம் ஆகஸ்ட் 12ஆம் தேதி எச்சரிக்கை விடுத்தது.

சம்பவத்தைக் கண்டிப்பதாகச் சொன்ன வாரியம், கண்மருத்துவம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அது தளர்த்துவதாகச் சொன்னது. அதுபோன்ற விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வாரியம் தயங்காது என்று குறிப்பிட்டது.

கண்மருத்துவர்கள் மருத்துவ ரீதியாக சோதிக்கப்பட்ட கிட்டப்பார்வைக் கட்டுப்பாட்டு மூக்குக்கண்ணாடிகளைத்தான் வழங்கவேண்டும் என்று வாரியம் சொன்னது.

கிட்டப்பார்வை சிறப்பு மூக்குக்கண்ணாடிக்குப் பதிலாக வேறு மூக்குக்கண்ணாடிகளைக் கொடுப்பது நோயாளிகளைப் பாதிக்கக்கூடும் என்ற வாரியம், தேவையான மூக்குக்கண்ணாடி இல்லாவிட்டால் மாற்றுவழிகளை உரிய மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கவேண்டும் என்று சுட்டியது.

கண்மருத்துவர்களும் மூக்குக்கண்ணாடிகளை விற்போரும் நோயாளியை வேறோரு மூக்குக்கண்ணாடி விற்போரிடம் அனுப்பி வைக்கலாம்.

கண்மருத்துவச் சட்டத்தின்கீழ், சம்பந்தப்பட்டோருக்கு அபராதம் விதிக்கவோ அவர்களின் உரிமத்தை ரத்து செய்யவோ, தற்காலிகமாகச் சேவையிலிருந்து அவர்களை விலக்கவோ வாரியத்துக்கு அதிகாரம் உண்டு.

கிட்டப்பார்வைக் குறைபாடு உள்ளோருக்குத் தொலைவில் உள்ளவை மங்கலாகத் தெரியும். அத்தகைய குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்குச் சிறப்பு மூக்குக்கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

அவை வழக்கமான மூக்குக்கண்ணாடிகளைவிட சற்று வித்தியாசமானவை.

எனவே, உரிய நேரத்தில் சரியான மூக்குக்கண்ணாடிகளைப் பிள்ளைகள் அணியத் தொடங்குவது அவசியம் என்று மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

கிட்டப்பார்வைக் குறைபாடு அதிகமுள்ள பிள்ளைகள் பெரியவர்களாகும்போது பார்வைக் கோளாற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்