சீனமொழி பயின்றாலும் இந்திய இசையில் பேரார்வம்

சீனமொழி பயின்றாலும் இந்திய இசையில் பேரார்வம்

2 mins read
a9b3ddaa-8898-4887-ad83-6a2d9223dec0
தம்பதியரின் இளைய மகன் யோரத் ஆங் நாயுடு, 13, மூன்றாவது மகன் காயஸ் ஆங் நாயுடு, 11. - படம்: ஜூடி ஆங்

கங்கா பாஸ்கரன்

திரு ஸ்ரீ விஜயகுமார் நாயுடு, திருமதி ஜூடி ஆங் தம்பதியரின் மூன்று பிள்ளைகளும் பள்ளியில் இரண்டாம் மொழியாகச் சீனம் பயின்றாலும் இந்தியப் பாரம்பரியக் கலைகளில் ஆர்வம் மிக்கவர்களாகவே இருக்கின்றனர்.

மூத்த மகள் த்ரிஷா அலியா ஆங் நாயுடு, 15, தொடக்கத்தில் சீன நடனம், ‘பாலே’ நடனம், பியானோ இசைப்பது முதலியவற்றில் ஆர்வம் காட்டினார். தொடக்கப்பள்ளியில் இணைப்பாட நடவடிக்கையாக இசைக்குழுவில் சேர்ந்தார். அங்கிருந்து அவருடைய இசைப்பயணம் தொடங்கியது.

இளையர் விழா, பள்ளித்தழுவிய போட்டிகளில் பங்குபெற்று பல பரிசுகளைப் பெற்ற இவர் ‘வாய்ஸ் ஆப் சிங்கப்பூர் சில்ட்ரன் குவையர்’ அமைப்பைப் பிரதிநிதித்து பங்கேற்ற உலகளவிலான பாடல் போட்டியில் இரண்டாம் பரிசை வென்றார். ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் பாடிய 5 பாடகர்களுள் இவரும் ஒருவர். இதனைத் தொடர்ந்து அவர் இந்திய கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார். 

இளைய மகன் யோரத் ஆங் நாயுடு, 13, இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். தன்னுடைய ஐந்தாவது வயதில் வயலின் இசைக்கத் தொடங்கினார். கொவிட் காலகட்டத்தில் இணையத்தளத்தின்மூலம் வயலின் வகுப்பில் சேர்ந்து தபேலா இசைக்கக் கற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் 2023ஆம் ஆண்டு முதல் நேரடியாக வகுப்பிற்குச் சென்று தபேலா கற்று வருகிறார். இவருக்கு டிரம்ஸ், வயலின் இசைக்கவும் தெரியும். 

மூன்றாவது மகன் காயஸ் ஆங் நாயுடுவுக்கு 11 வயது. சித்தாரை இசைக்கும் முறையைத் தன் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார். தந்தையையே குருவாகக் கொண்டாலும் முறைப்படிக் கற்க சித்தார் வகுப்பிலும் இணைந்துள்ளார். 

ஆரோன் ஸ்ரீகுருஜி என்று பரவலாக அறியப்படும் திரு ஸ்ரீ விஜயகுமார் நாயுடு, சிங்கப்பூர் நுண்கலைக் கழகத்தில் தபேலா, சித்தார் வகுப்பில் சேர்ந்து முறைப்படி பயிற்சி பெற்றவர். மாணவர்கள் சிலருக்கும் பயிற்றுவிப்பாளராக இருந்துள்ளார்.

இவர் தேசிய கலை கழகம் நடத்திய தேசிய இந்திய இசைப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய தந்தை 1920ஆம் ஆண்டுவாக்கில் ஆர்மோனியம் இசைத்து முருகன்மீது பக்திப் பாடல்கள் பாடியுள்ளார்.

குடும்பத்தில் இசைக்குரிய ஆர்வம் இருந்ததால்தான் தங்கள் குழந்தைகளும் தமிழ்மொழியைப் படிக்காதபோதும் இந்திய இசையில் அதிக ஆர்வம் காட்டுவதாகக் கூறினார் திருமதி ஜூடி ஆங். அவர்களுடைய குழந்தைப் பருவத்தில் தமிழ்மொழியைச் சிறிது கற்றிருந்ததால் அவர்களால் தமிழில் பேச இயலாவிட்டாலும் ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடிகிறது. அதுவும் அவர்களின் இசை ஆர்வத்திற்குத் தூண்டுகோலாக இருக்கிறது.

இவர்கள் மூவரும் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதால் அதற்கான ஏற்பாடு செய்யவிருக்கிறோம் என்று திருமதி ஜூடி ஆங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்