குழந்தைகளுக்காகவே தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு ஆண்டுதோறும் நடைபெறும் ‘சிறார்க்கான விடுமுறை விழா 2026’ விரைவில் தொடங்கவிருக்கிறது.
மே 30 முதல் ஜூன் 28 வரை சிங்கப்பூர்ச் சிறுவர் அரும்பொருளகம் ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில் விளையாட்டுகள், இசை, கலை நடவடிக்கைகள் இடம்பெறும்.
அந்த நடவடிக்கைகள் சிங்கப்பூர் முழுவதும் உள்ள வெவ்வேறு இடங்களில் நடைபெறும். அவற்றில் சிலவற்றுக்கு அனுமதி இலவசம்.
இவ்வாண்டு விழாவுக்கான கருப்பொருள் ‘நீடித்த நிலைத்தன்மை’. அந்தக் கருப்பொருளை ஒட்டிய சில விளையாட்டுகள்மூலம் சுற்றுச்சூழலை எப்படிப் பேணுவது என்பதைச் சிறார்கள் கற்றுக்கொள்வார்கள்.
அந்த விளையாட்டுகளின் ஒரு பகுதியாக, குழந்தைகள் மறுசுழற்சியை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர். அதன்மூலம், அவர்கள் பசுமையான எதிர்காலம் பற்றி அறிந்துகொள்வார்கள்.
குழந்தைகள் விளையாட்டின்மூலம் இயல்பாகக் கற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணத்தில், சிங்கப்பூர்ச் சிறுவர் அரும்பொருளகம் ‘சிறார்க்கான விடுமுறை விழா 2026’ஐ நடத்தவிருக்கிறது.
விழாவில் பெற்றோரும் கலந்துகொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
‘சிறார்க்கான விடுமுறை விழா 2026’இன் ஒரு பகுதியாக, இந்திய மரபுடைமை நிலையத்துடன் இணைந்து சிங்கப்பூர்ச் சிறுவர் அரும்பொருளகம் ‘ராஜா அண்ட் தி லோஸ்ட் ஜர்னல்’ (Raja and the Lost Journal) எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மே 30, 31, ஜூன் 5, 6ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் அதில், குழந்தைகள் விளையாட்டுகள் மூலம் தங்கள் கற்பனையைப் பயன்படுத்தி வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
அதோடு, சிங்கப்பூரின் தொடக்கக்கால குடியேறிகள் தங்களுக்குக் கிடைத்த குறைந்தபட்ச வளங்களை மறுசுழற்சி செய்து, அவற்றைப் புதிய பொருள்களாகப் பயன்படுத்தி எவ்வாறு புத்திசாலித்தனமாகச் செயல்பட்டார்கள் என்பதையும் அந்த நிகழ்ச்சியில் தெரிந்துகொள்ளலாம்.
ஜூன் மாதப் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, குடும்பத்துடன் சென்று பார்க்க இந்நடவடிக்கைகள் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று ‘சிறார்க்கான விடுமுறை விழா’வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேல்விவரங்களுக்கும் நுழைவுச்சீட்டுகளுக்கும் சிங்கப்பூர்ச் சிறுவர் அரும்பொருளகத்தின் இணையத்தளத்தை நாடலாம்.

