தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரின் பரேட் கடைத்தொகுதியில் சிறுவர்களின் குறும்புச்செயல்

2 mins read
c506b96b-78c0-4fb1-94df-3dfecd6f8ba1
மரின் பரேட்டில் உள்ள ஐமால் கடைத்தொகுதியின் உச்சியில் இருந்து மூன்று சிறுவர்கள் தண்ணீர் நிரப்பிய பலூன்களை கீழே வீசினர். - படங்கள்: ஸ்டோம்ப்

ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை, மரின் பரேட் சென்ட்ரலில் உள்ள ஐமால் கடைத்தொகுதியின் உச்சியில் உள்ள திறந்தவெளியிலிருந்து மூன்று சிறுவர்கள் தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்களை வீசினர்.

அச்சிறுவர்கள் அவ்வாறு செய்வதை எதிர் கட்டடத்திலிருந்து பார்த்த மேகன் என்ற ஸ்டோம்ப் இணையவாசி அதை காணொளியாகப் பதிவு செய்தார். இது அன்று மாலை 6.25 மணிக்கு நடந்தது.

“நான் எதிர்புறத்தில் உள்ள கட்டடத்தில் இருந்தேன். சிறுவர்கள் ஐமால் கடைத்தொகுதி கூரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிவதைப் பார்த்தேன். அது வழக்கமாக காலியாக இருக்கும்,” என்று சம்பவத்தின் காணொளியைப் பகிர்ந்துகொண்ட மேகன் விவரித்தார்.

“ஏறக்குறைய ஐந்து பலூன்கள் கூரையிலிருந்து தரையிலும் சாலையிலும் வீசப்பட்டன. அந்தப் பலூன்கள் கீழே வெடித்து, சில வழிப்போக்கர்களைத் தாக்கும் அளவுக்குச் சென்றன. பலூன்களிலிருந்த தண்ணீர் அவர்கள் மீது சிதறின,” என்றும் மேகன் கூறினார்.

கட்டடத்தின் மேலிருந்து ஒரு விண்கல் வீழ்வது போலவும், அது தரையில் மோதியபோது மூன்று பேர் அதிர்ச்சியுற்றதையும் காணொளியில் காண முடிந்தது. அதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள், பின்னர் கட்டடத்திற்குள் ஓடினர்.

“கீழே இருந்தவர்கள் கட்டடத்தை அண்ணாந்து பார்த்தபோது அதிர்ச்சியில் இருப்பது போல் தோன்றியது. பின்னர் அவர்கள் கட்டடத்தின் உச்சிக்குச் சென்று யார் அந்தச் செயலைச் செய்திருப்பார்கள் என்று கண்டுபிடிக்க முயன்றனர்,” என்று மேகன் கூறினார். அவர் இதுபற்றி காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார்.

“இது மிகவும் ஆபத்தான மற்றும் கவனக்குறைவான செயல் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், எல்லாரும் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள். கட்டடத்தின் கீழ் நிறைய பேர் கடந்து செல்கிறார்கள். பலர் வயதானவர்கள் மற்றும் இளம் பிள்ளைகள். அவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள்,” என்றும் திருவாட்டி மேகன் விவரித்தார்.

“அந்தச் சிறுவர்கள் இந்த முறை தண்ணீர் பலூன்களை வீசியிருக்கலாம். ஆனால், அடுத்த முறை அது மிகவும் ஆபத்தானதாகவோ அல்லது உயிர்க்கொல்லி செயலாகவும் இருக்கலாம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்