சிறாருக்குச் சமய அறிவையும் அறத்தையும் புகட்ட முற்பட்டுவரும் ‘புரோஜெக்ட் பக்தி’ இயக்கம் தொடங்கி 25 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
இந்த இயக்கத்தின் வழியே பாலர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை பயிலும் மாணவர்கள், வாரத்திற்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்து சமயம் சார்ந்த தகவல்களைக் கற்கின்றனர். இதிகாசப் புராணங்களைக் கற்றுணர்வதோடு சுலோகங்கள், பாடல்கள் போன்றவற்றைப் பிள்ளைகள் மனனம் செய்யப் பழகுகின்றனர்.
ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் பிள்ளைகள், பெற்றோர், தொண்டூழியர்கள், ஆலயப் பிரதிநிதிகள், சமூகத் தொண்டூழியர்கள் ஆகியோர் ஒன்றுதிரண்டனர்.
அன்றைய இளையர்கள் வளர்த்த இயக்கம்
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய இந்து அறக்கட்டளை வாரியத்தின் முன்னாள் தலைவர் ராஜன் கிருஷ்ணன், 2001ல் இவ்வியக்கம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்த எளிமையை நினைவுகூர்ந்தார்.
“அப்போது நான் ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலின் தலைவராக இருந்தேன். வந்திருந்த பிள்ளைகளைத் திறந்த கரங்களுடன் நாங்கள் வரவேற்றோம். தனி வகுப்பறை இல்லாமல் கோயில் மண்டபத்தில் பொதுமக்கள் நடமாடிய இடத்திலேயே வகுப்புகளை நடத்தினோம்,” என்று திரு.ராஜன் கூறினார்.
தொடக்கத்தில் கிட்டத்தட்ட 15 பல்கலைக்கழக மாணவர்கள் பயிற்றுவிப்பாளர்களாகச் செயல்பட்டதாகவும் எல்லாரையும் எளிதில் சென்றடையும் வகையில் அவ்வகுப்புகள் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டதாகவும் திரு.ராஜன் குறிப்பிட்டார். சமய அறிவை இளையர்கள் சுயமாகக் கற்று, உடனடியாக அதனைப் பிள்ளைகளுக்குக் கற்பித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு ஞாயிறுதோறும் ‘அண்ணன்’ ‘அக்கா’க்கள் வழியாகக் கற்ற பிள்ளைகளில் சிலர், வளர்ந்து இளையரான பிறகு அவர்களுமே பிள்ளைகளுக்குக் கற்பித்து வருகின்றனர்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் இயங்கும் இந்து ஆய்வுக் குழு, 2009ல் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை உருவாக்க முற்பட்டது. இதன்படி, 16 பாடநூல்கள் உருவாக்கப்பட்டன.
இந்து ஆலோசனை வாரியத்தின் கீழ் தொடரும்
‘புரோஜெக்ட் பக்தி’ செப்டம்பர் 14 முதல் இந்து ஆலோசனை வாரியத்தின்கீழ் இயங்கும் என்றும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்காகச் சமய வகுப்புகளை நடத்திவரும் ‘புரோஜெக்ட் வித்யா’ திட்டத்தில் ‘புரோஜெக்ட் பக்தி’ ஓர் அங்கமாக விளங்கும் என்றும் நிகழ்ச்சியின் நிறைவில் தெரிவிக்கப்பட்டது.
காலத்திற்கேற்ற வகையில் இத்திட்டத்தை மாற்றியமைப்பதே இந்த மாற்றத்தின் நோக்கம் என்று இந்து ஆலோசனை வாரியத்தின் தலைவர் திரு.க.செங்குட்டுவன் தெரிவித்தார்.
“நேரடி வகுப்புகளுடன் மின்னிலக்கத் தொழில்நுட்பம், காணொளி வகுப்புகள் போன்றவற்றின் மூலம் பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் நிறைவான அனுபவத்தை வழங்குவது எங்கள் நோக்கம்,” என்று அவர் கூறினார்.
நிறைவளிக்கும் அனுபவம்
பல்லாண்டுகளாக நீடித்துவரும் இத்திட்டம் தலைமுறைகளை இணைத்துள்ளதாகத் தமிழ் முரசிடம் பேசிய பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
இளம்பருவத்தில் மாணவராகப் பக்தி வகுப்புகளில் சேர்ந்த 37 வயது திருவாட்டி ஜெயஸ்ரீ புருஷோத்தமன், ஆசிரியராக 12 ஆண்டுகள் இதில் பங்காற்றியுள்ளார். தமக்குப் பக்தி வகுப்புகளைக் கற்பித்த ‘அண்ணன்’ ஒருவர், கலகலப்பாகக் கற்பித்ததை இன்றளவும் நினைத்து மகிழ்வதாக அவர் சொன்னார்.
பல்லாண்டுகளாகக் கோயில்களில் தொண்டாற்றிவரும் வணிகச் சேவை மேலாளர் 50 வயது திருவாட்டி கலைச்செல்வி திருமேனி, தமது மகளை இவ்வாண்டு பக்தி வகுப்புகளில் சேர்த்ததில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
“இந்து தர்மத்தைப் பற்றி நான் அறிந்திராத பல்வேறு தகவல்களை என் மகள் கற்பதைக் கண்டு பூரிப்படைகிறேன்,” என்று அவர் கூறினார்.
தமது 7 வயது மகனும் 5 வயது மகளும் கடந்த ஈராண்டுகளாகப் பக்தி வகுப்புகளுக்குச் செல்வதாகக் குறிப்பிட்ட 37 வயது தந்தை திரு.தினேஷ், அவர்கள் சுலோகங்கள் உட்பட பல்வேறு பிரார்த்தனைகளை வாசிக்க முடிவதைக் கண்டு மகிழ்வதாகக் கூறினார்.
