தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-பசிபிக் கூட்டணி தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் சிங்கப்பூர், சிலி, பெரு

2 mins read
4fd8ca32-39e3-4ae5-8c19-a8eace912ec1
ஒப்பந்தத்தில் இணையத் தேவையான பணிகள் நிறைவடைந்ததும் கொலம்பியாவும் மெக்சிகோவும் இணைந்துகொள்ளும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்-பிசிபிக் கூட்டணி தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் ஐந்து பங்காளித்துவ நாடுகள் இடம்பெறுகின்றன. அவற்றில் சிங்கப்பூர், சிலி, பெரு ஆகிய மூன்று நாடுகளுக்கு இத்தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நடப்புக்கு வந்துள்ளது.

இத்தகவலை வர்த்தக, தொழில் அமைச்சு திங்கட்கிழமை (மே 5) வெளியிட்டது.

இந்த ஒப்பந்தம் வாயிலாக சிலி, கொலம்பியா, மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூரால் எளிதில் வர்த்தகம் செய்ய முடியும்.

இந்த நான்கு நாடுகளின் மொத்த மக்கள் தொகை 235 மில்லியன்.

இதுவே உலகின் ஒன்பதாவது ஆகப் பெரிய பொருளியல் என்று கூறப்படுகிறது.

இந்தத் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 26ல் கையெழுத்திடப்பட்டது.

அதில் இணைந்துகொள்வதாக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சிங்கப்பூர் தெரிவித்தது.

2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெருவும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சிலியும் இணைந்துகொண்டன.

சிங்கப்பூர், சிலி, பெரு ஆகிய மூன்று நாடுகளுக்கும் இந்த ஒப்பந்தம் முதலில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஒப்பந்தத்தில் இணையத் தேவையான பணிகள் நிறைவடைந்ததும் கொலம்பியாவும் மெக்சிகோவும் இணைந்துகொள்ளும்.

பங்காளித்துவ நாடுகளுக்கிடையிலான வர்த்தகப் பொருள்கள் மீதான பெரும்பாலான வரிகள் ரத்து செய்யப்படும்.

சுங்கத்துறை செயல்முறைகள் வெளிப்படையுடன் துரிதமான முறையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் சிங்கப்பூர் சேவை நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சாதகமாக இருக்கும்.

குறிப்பிட்ட நாட்டவரை மூத்த நிர்வாகியாக சிங்கப்பூர் நிறுவனங்கள் நியமிக்கத் தேவையில்லை.

பசிபிக் கூட்டணியைச் சேர்ந்த நான்கு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 2.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$3.51 டிரில்லியன்).

குறிப்புச் சொற்கள்