பல்லாண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ள நம்பிக்கையே சீனா-சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் 35ஆண்டுகால நல்லுறவுக்கு காரணம் என்று சீனாவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடத்திவரும் துணைப் பிரதமர் கான் கிம் யோங் குறிப்பிட்டுள்ளார்.
மாறுபட்ட இலக்குகளைக் கொண்டிருந்தாலும் அவற்றுள் ஒத்துழைக்கக்கூடிய அம்சங்களைக் கண்டறிந்து இந்த உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய இருபெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே சிங்கப்பூர் இந்த நிலையைத் தக்கவைத்துள்ளது.
நிதி மேலாண்மை, விவசாயம், கலாசாரம் ஆகிய துறைகளில் சீனாவின் செயற்கை நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்தும் செயல்முறைகளைச் சிங்கப்பூர் கற்றுக்கொண்டு வருகிறது.
வளர்ச்சியை நோக்கி ஒன்றாகச் செல்லும் இந்த நல்லுறவுப் பயணம் நம்பிக்கை, புரிந்துணர்வு ஆகிய பண்புகளை உள்ளடக்கி, தலைமுறைகளைக் கடந்து செல்கிறது என்று திங்கட்கிழமை (டிசம்பர் 15) சிங்கப்பூர் ஊடகங்களிடம் பேசிய துணைப் பிரதமர் கூறினார்.
சொங்சிங் நகரில் நடந்த இருநாட்டு உச்சநிலைப் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு திரு கான் இதனை செய்தியாளர்களிடம் கூறினார்.
“இறுதியில் நாங்கள் இரு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். எங்களுக்கு மாறுபட்ட இலக்குகள் இருந்தாலும் மக்களுக்கும் வர்த்தகங்களுக்கும் நன்மை பயக்கும் வழிகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதைத் தொடர்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
“பொருளியலையும் மக்களையும் மறுசீரமைக்கும் மேம்பாட்டுத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு முக்கிய இடத்தைப் பெறுகிறது. அதன் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்தி, தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் கொள்கை வரையறைகள் குறித்து இருநாடுகளும் ஆராய்ந்து வருகின்றன,” என்று துணைப்பிரதமரின் குழுவுடன் சீனா சென்றுள்ள தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.
தென்கிழக்காசிய வட்டாரத்தில் இருந்து அமெரிக்கா விலகும் போக்கை எடுத்துள்ளதை எவ்வாறு சிங்கப்பூர் சமாளிக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போட்டித் தன்மை நிலவினாலும் இருநாடுகளுடனும் சிங்கப்பூர் தொடர்ந்து வர்த்தக நல்லுறவை மேற்கொள்ளும் என்று திரு கான் அதற்கு பதிலளித்தார்.

