சைனாடவுன் விபத்து: முதியவர் மருத்துவமனையில் அனுமதி

சைனாடவுன் விபத்து: முதியவர் மருத்துவமனையில் அனுமதி

1 mins read
905499d5-c81c-4525-8741-8be15ae81be4
மோட்டார் சைக்கிள் ஒன்று முதியவர் மீது மோதியதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்துள்ளன. காயமடைந்த முதியவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். - படம்: எஸ்ஜிஆர்வி ஃபிரண்ட் மேன்/ஃபேஸ்புக்

சைனாடவுன் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் காயமடைந்த 86 வயது முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள அப்பர் கிராஸ் ஸ்திரீட் மற்றும் இயூ டோங் சென் ஸ்திரீட் சாலைச் சந்திப்பில் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 5) நண்பகல் வேளையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மோட்டார் சைக்கிள் ஒன்று முதியவர் மீது மோதியதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்துள்ளன. காயமடைந்த முதியவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் சுயநினைவுடன் இருந்தார். இச்சம்பவம் குறித்து 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி விசாரணையில் உதவி வருகிறார்.

சிங்கப்பூரில் அண்மைக்காலமாகச் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் போக்குவரத்து விபத்துகளால் 149 பேர் உயிரிழந்தனர். 2016ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 142ஆக இருந்தது.

மேலும், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 9,342ஆக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் 9,955 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, விபத்துகளில் சிக்கி உயிரிழந்த மூத்தோரின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 11ஆக இருந்தது, 2025ஆம் ஆண்டில் 27ஆக இருமடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்த முதியவர்கள் அனைவரும் பாதசாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்