தங்க நகைகளையும் தங்கக் கட்டி ஒன்றையும் $313,000க்கு அடையாளம் தெரியாத நபரிடம் விற்றபோது தகுந்த சோதனைகளைச் செய்யாததற்காக நகைக்கடை ஒன்றின்மீது மே 7ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பீப்பள்ஸ் பார்க் காம்பிளெக்ஸ் கடைத்தொகுதியில் உள்ள ‘கிம் ஹெங் ஜுவல்லர்ஸ் அண்ட் கோல்ட்ஸ்மித்ஸ்’ மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தான் பெற்ற பணம், மோசடிகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட பிறகு, வாடிக்கையாளர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதற்காக அந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சென்ற ஆண்டு செப்டம்பருக்கும் அக்டோபருக்கும் இடைப்பட்ட காலத்தில், பாதிக்கப்பட்டோரின் ‘ஆண்ட்ராய்டு’ கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தீங்குநிரல்கள் சம்பந்தப்பட்ட மோசடிகள் குறித்து காவல்துறைக்குப் புகார்கள் கிடைத்ததாக, காவல்துறையும் சட்ட அமைச்சும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டன.
இவை பாதிக்கப்பட்டோரின் கணக்குகளிலிருந்து அனுமதி அளிக்கப்படாத வங்கிப் பரிவர்த்தனைகள் என அறிக்கை கூறியது.
அந்தப் பணம் பின்னர் கிம் ஹெங் நகைக்கடைக்கும் அடையாளம் தெரியாத நபர் ஒருவருக்கும் இடையே மூன்று முறை பரிவர்த்தனை செய்யப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்தகைய ஒரு பரிவர்த்தனை 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதிவாக்கில் நடைபெற்றதாகவும், $28,000க்கு விற்பனையான தங்கச் சங்கிலி அதில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
$173,295க்கு விற்கப்பட்ட 24 கேரட் தங்கச் சங்கிலியும் தங்கத் தொங்குமணியும் சம்பந்தப்பட்ட மற்றொரு பரிவர்த்தனை செப்டம்பர் 16ஆம் தேதிவாக்கில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
மூன்றாவது பரிவர்த்தனை 2023ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதிவாக்கில் நடைபெற்றது. அதில் $112,332க்கு விற்பனையான தங்கக் கட்டியும் 24 கேரட் தங்கச் சங்கிலியும் சம்பந்தப்பட்டிருந்தன.
வழக்கு ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

