சைனாடவுன் ஹோட்டலில் கொல்லப்பட்ட மாது: சம்பவ இடத்தில் சந்தேக நபரிடம் விசாரணை

1 mins read
de6b71ca-3751-4f04-9e50-f7ed2f28c05c
கால்களிலும் கைகளிலும் விலங்கிடப்பட்ட நிலையில் 41 வயது சந்தேக நபர் சலேஹுதீன், வாகனத்திலிருந்து இறங்கினார். - படம்: விஷ்ருதா நந்தகுமார்

ஹோட்டல் அறை ஒன்றில் தன் மனைவியைக் கொன்றதன்பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 41 வயது இந்தோனீசிய ஆடவரைக் காவல்துறையினர் விசாரணைக்காகப் புதன்கிழமை (டிசம்பர் 3) சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சலேஹுதீன் என்ற அந்த ஆடவர், தனது மனைவியான 38 வயது நூர்டியா ரஹ்மான் ரேரியைக் கொன்றதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சவுத் பிரிட்ஜ் ரோட்டிலுள்ள ‘கேப்ரி பை ஃபிரேசர் சைனா ஸ்குவேர்’ ஹோட்டலுக்கு காலை 9.15 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டார்.

சிவப்பு டீ-சட்டையும் கறுப்பு கால் சட்டையும் அணிந்து கால்களிலும் கைகளிலும் விலங்கிடப்பட்ட நிலையில் சலேஹுதீன் காணப்பட்டார்.

கறுப்பு வாகனம் ஒன்றிலிருந்து ஆறு அதிகாரிகளோடு வெளியேறிய சலேஹுதீன், தன் முகத்தை மறைத்துக்கொள்ளும் வகையில் தலைகுனிந்து நடந்து சென்றார். சம்பவம் நடந்த ஹோட்டல் அறை 703க்கு சலேஹுதீன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசாரணை, ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடந்தது.

அக்டோபர் 24ஆம் தேதி அதிகாலையில் சம்பவம் நடந்த பின்னர் சலேஹுதீன், புக்கிட் மேரா ஈஸ்ட் அக்கம்பக்கக் காவல் நிலையத்திற்குச் சென்று காவல்துறையிடம் சரணடைந்தார்.

கொல்லப்பட்ட பெண் ஹோட்டல் அறையில் அசைவின்றிக் காணப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் உறுதி செய்தனர். 

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சலேஹுதீனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்