தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் தர்மனின் சீன எழுத்தோவியம் $308,888க்கு ஏலம் போனது

1 mins read
39545be3-6067-4c55-9f74-b8030341678d
அதிபர் தர்மன் சண்முகரத்னம் தம் கலைப்படைப்பை ஆக அதிக விலை கோரிய ‘எஞ்சன் ஃபண்ட் மேனேஜ்மண்ட்’ நிறுவனர் ஃபாங் ஆங்ஸன்னிடம் (வலமிருந்து மூன்றாவது) வழங்கினார். - படம்: ஜேம்ஸ் டான்

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இணையத்தில் ஏலத்துக்கு விடப்பட்ட அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் சீன எழுத்தோவியப் படைப்பு, (Chinese calligraphy) $308,888 தொகையைப் பெற்றது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த மைல்கல்லைக் குறிக்கும் விதமாக ஷங்ரிலா ஹோட்டலில் சனிக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடைவள்ளல்கள், சமூகத் தலைவர்கள், நிறுவன நிர்வாகிகள், தொழில்முனைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் புரவலரான அதிபர் தர்மன், தம் கலைப்படைப்பை ஆக அதிக விலை கோரிய ‘எஞ்சன் ஃபண்ட் மேனேஜ்மண்ட்’ நிறுவனர் ஃபாங் ஆங்ஸன்னிடம் வழங்கினார்.

66 செ.மீ., 124.5செ.மீ. அளவு கொண்ட இந்தக் கலைப்படைப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட தொடக்க விலை $25,000. இணையத்தில் இதற்கான ஏலம் அக்டோபரில் தொடங்கியது.

ஏலத்தில் பெறப்பட்ட நிதி சிறார்கள், இளையர்கள், குடும்பங்கள், உடற்குறையுள்ளோர், தனியாக வசிக்கும் முதியோருக்கான திட்டங்களுக்கு ஆதரவளிக்க பயன்படுத்தப்படும் என செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.

ஏலத்துக்கு விடப்பட்ட இதர பொருள்களில் வண்ணப் பூச்சு வேலைகள், சிற்பம், 18 ஆண்டு விஸ்கி, கல்ஃப் ஏர் விமானப் பயணப்பாதையில் உள்ள ஏதாவது ஓர் இடத்துக்குச் சென்றுவர இரு ‘பிஸ்னஸ் கிளாஸ்’ பயணச்சீட்டுகள் உள்ளிட்டவை அடங்கும். ஒவ்வொரு பொருளும் $4,300 முதல் $7,800 வரை பெற்றது. மரகதமும் வைரமும் கொண்ட அட்டிகை ஒன்று $100,000க்கு ஏலம் போனது.

குறிப்புச் சொற்கள்