சிங்கப்பூரின் ஆகப்பெரியதொரு சமூகமான சீன சமூகம் பல இன சிங்கப்பூரை உருவாக்குவதில் முக்கிய, முன்னணி பங்கை வகிப்பதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.
மேலும், தேசநலனுக்கும் பரந்த நோக்கத்திற்கும் அந்தச் சமூகம் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது என்றார் அவர்.
பல இன தேசத்திற்குத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய கொள்கைகளை அந்தச் சமூகம் ஆதரித்து வந்துள்ளது என்று சிங்கப்பூர் சீன கலாசார மையத்தில் (SCCC) உரையாற்றியபோது திரு லீ குறிப்பிட்டார்.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக அந்த மையமும் சிங்கப்பூர் சீன குலவழிச் சங்கக் கூட்டமைப்பும் (SFCCA) இணைந்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் 888 விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் மத்தியில் மாண்டரின் மொழியில் உரையாற்றிய மூத்த அமைச்சர், “சீன சமூகம் தனது சொந்த கலாசார பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கும் அதேநேரம் இதர இனங்களையும் கலாசாரங்களையும் மதிக்கிறது.
“மேலும், சிங்கப்பூரின் நீண்டகால நிலைத்தன்மைக்கும் அமைதிக்கும் அவ்வாறு செய்வது அவசியம் என்பதையும் சிங்கப்பூரர்களாக நாம் அனைவரும் சரிசமமாகக் கருதப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்து வைத்துள்ளனர்,” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “சிங்கப்பூரின் சீன கலாசாரம் தனித்துவமிக்க உணர்வுகளையும் பண்புகளையும் வளர்த்துக்கொண்டு உள்ளது. பாரம்பரியத்தால் வளப்படுத்தப்பட்டு பல கலாசாரச் சூழலில் வளர்க்கப்பட்ட பண்புகள் அவை.
“பல உள்ளூர் கலைஞர்கள் நமது நாட்டின் வலுவான அம்சங்களின் அடிப்படையில் வழங்கிய படைப்புகளுக்காகவும் நிகழ்ச்சிகளுக்காகவும் பாராட்டப்படுகிறார்கள். அது கலாசார நம்பிக்கையை சிங்கப்பூருக்கு அளித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“மேலும், தான் உருவான 2017ஆம் ஆண்டு முதல், சிங்கப்பூர் சீன கலாசார மையம் உள்ளூர் சீன கலாசாரத்தைப் பறைசாற்றி வளர்த்து வந்துள்ளது.
“சிங்கப்பூரின் சீன கலாசாரத்தைப் பற்றிய நிரந்தரக் கண்காட்சி நிறுவப்பட்டதும் அதில் அடங்கும். அந்தக் கண்காட்சியை இதுவரை 300,000க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.
“அத்துடன், கடந்த ஆண்டு இருமொழி கலாசாரக்களஞ்சியத்தை இணையத்தில் தொடங்கியது. உள்ளூர் சீன கலாசாரத்தின் பண்புகளை அது விரிவாக விளக்குகிறது.
“அந்தக் கலாசாரக் களஞ்சியத்தை கற்பித்தல் பாடங்களுடன் சேர்க்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது,” என்றார் திரு லீ.

