தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாட்டு நிர்மாணத்தில் சீனச் சமூகத்திற்கு முக்கியப் பங்கு

3 mins read
ba321d2c-da71-4cba-bec6-87f3da57448a
இவ்வாண்டு சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற வெளிநாட்டு சிங்கப்பூரர்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூரின் சீனச் சமூகம் நாட்டு நிர்மாணத்தில் முக்கியப் பங்காற்றியிருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

தனிமனிதர்களும் நிறுவனங்களும் பல்வேறு வகைகளில் கைகொடுத்திருப்பதாக அவர் சொன்னார்.

காலனித்துவக் காலத்தில் சீனத் தலைவர்களும் வணிகர்களும் தாராளமாய் நன்கொடை வழங்கினர் என்றும் அது சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாய் அமைந்தது என்றும் திரு வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில், மாண்டரின் மொழியில் பேசியபோது குறிப்பிட்டார்.

அவர்கள் குலவழிச் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளை நிறுவினர்; பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் கட்டினர்; நல்வாழ்வு அமைப்புகளை உருவாக்கினர்; இவையெல்லாம் இன்றும் துடிப்புடன் இயங்குகின்றன. இவை சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் பலன் தருவதாகப் பிரதமர் கூறினார்.

சீனச் சமூகம் நிறுவிய பல பள்ளிகள் தலைமுறை தலைமுறையாக மாணவர்களிடம் நற்பண்புகள், மீள்திறன், நாட்டுப்பற்று முதலியவற்றை வேரூன்றச் செய்திருக்கின்றன.

சீன மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் நாட்டு நிர்மாணத்திற்குக் கணிசமாகப் பங்காற்றியுள்ளனர். நமது சமுதாயத்தில் தலைவர்களைப் பேணி வளர்ப்பதில் அவர்கள் அயராது பணியாற்றியிருக்கின்றனர். சீன மொழி ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வைக் கௌரவிக்கும் வகையில் சாவ்பாவ் நாளிதழ் அடுத்த மாதம் பாராட்டு நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

தொடக்கத்திலிருந்தே இங்குள்ள சீனச் சமூகம் பள்ளிப் பாடப்புத்தகங்களின் வழியாகச் சிங்கப்பூர் உணர்வைப் பேணி வளர்க்க நிறைய முயற்சிகளை எடுத்துள்ளது.

அண்மையில் மீடியாகார்ப் நிறுவனமும் சிங்கப்பூர்ச் சீனக் கலாசார நிலையமும் இணைந்து உள்நாட்டுப் பாடப்புத்தகங்கள் குறித்த ஆவணப்படமொன்றைத் தயாரித்திருந்தன. உள்ளூர் அடையாளத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பைச் சீனச் சமூகம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஏற்றுக்கொண்டதை அது காட்டுவதாகத் திரு வோங் சுட்டினார்.

சுதந்திரத்திற்குப் பிந்திய சிங்கப்பூரை உருவாக்குவதில் அது ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது என்றார் அவர். நம் சொந்தக் கலாசார அடையாளத்தில் நம்பிக்கை கொள்ளவும் பெருமையடையவும் அது உதவியது. அத்துடன் பல்லின, பல கலாசார சிங்கப்பூரை உருவாக்குவதற்கான கொள்கைகளுக்குச் சீனச் சமூகம் ஆதரவளிக்கவும் அது அடித்தளமாக அமைந்தது என்று திரு வோங் குறிப்பிட்டார்.

சீனச் சிங்கப்பூரர்களுக்கு இப்போது சொந்த அடையாளம் இருக்கிறது. சிங்கப்பூரைவிட்டு வெகுதொலைவில் இருந்தாலும் அவர்கள் சிங்கப்பூரர்கள் என்பதை எப்போதும் மறப்பதில்லை என்றார் பிரதமர்.

அண்மையில் தமது சீனப் பயணத்தின்போது சிங்கப்பூரர்கள் பலரைச் சந்தித்ததாகத் திரு வோங் சொன்னார். அவர்கள் சீனாவில் உள்ள வாழ்க்கைக்குப் பழகிவிட்டாலும் தங்களைப் பார்த்தவுடன் சிங்கப்பூரர்கள் என்ற உணர்வு மேலோங்கியதையும் உடனே கலந்து பேசமுடிந்ததையும் பிரதமர் சுட்டினார்.

சிங்கப்பூரர் எனும் வலுவான அடையாளத்தை உருவாக்கியதில் சீனச் சமூகத்தின் பங்கு முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார். வருங்காலத்தில் அரசாங்கம் சீனச் சமூகத்துடனான உறவை வலுப்படுத்திக்கொள்ளும் என்றார் திரு வோங்.

சீனச் சமூகத் தொடர்புக் குழுவை வழிநடத்தும் பொறுப்பை அண்மையில் அமைச்சர் சீ ஹொங் டாட்டிடம் கொடுத்திருப்பதாக அவர் சொன்னார். ஏற்கெனவே திரு சீயும் அவரின் குழுவும் சங்கங்களுடன் பேசத் தொடங்கிவிட்டனர்.

பல குலவழிச் சங்கங்கள் தலைமைத்துவத்தைப் புதுப்பிப்பதிலும் வளங்களைப் பெறுவதிலும் சவால்களை எதிர்நோக்குவது தெரியவந்ததாகத் திரு வோங் குறிப்பிட்டார். சவால்களைச் சமாளித்துத் துடிப்புடன் இயங்கி, சமூகத்திற்கு அவை பங்களிக்க உதவிகள் நல்கப்படும் என்றார் அவர்.

அடுத்த தலைமுறைச் சமூகத் தலைவர்களை முறையாக உருவாக்குவதற்குப் புதிய பயிற்சித் திட்டமொன்றும் அறிமுகம் காணவிருக்கிறது. நமது சமூகத்தில் புதிய குடியேறிகள் ஒருங்கிணைய தொடர்ந்து உதவக் குலவழிச் சங்கங்களுடன் அரசாங்கம் பணியாற்றும் என்றும் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்