அடுத்த ஆண்டு பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களைக் கொண்ட குறைந்த வருமானம் ஈட்டும் 8,500 குடும்பங்களுக்கு சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் (சிடிஏசி) தலா $400க்கான மின்னிலக்கப் பற்றுச் சீட்டுகளை வழங்கும்.
கல்விப் பருவத்துக்கு தயாராகவும் போக்குவரத்துச் செலவு, உபகரணங்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு உதவவும் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பற்றுச்சீட்டுகள் சிடிஏசியின் உதவி நாடும் அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) நடந்த ‘பள்ளிக்குத் தயார்’ என்ற சமூக நிகழ்வில் அதன் நிர்வாக இயக்குநர் டான் யாப் கின் தெரிவித்தார். சுமார் 1,500 குடும்பங்கள் அந்த ஒன்றுகூடலில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு தொடர்ந்து 22ஆம் ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சரும் கல்வி அமைச்சின் மூத்த துணையமைச்சருமான டேவிட் நியோ, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் மன்றம் 8,300 குடும்பங்கள் பயனடையும் வகையில் $3 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை வழங்கியது.
லாப நோக்கமற்ற சீனர்களின் சுய உதவி இயக்கமான சிடிஏசி மேலும் $47 மில்லியன் தொகையை அதன் கல்வித் திட்டங்களின் விரிவாக்கத்துக்கு ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டது. அந்தத் திட்டங்கள் மூலம் அதிகமான குடும்பங்கள் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான ஆதரவும் அத்திட்டங்களில் அடங்கும். அதன் விவரங்கள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.
கடந்த ஆண்டு இதன் மதிப்பு $41 மில்லியனாக இருந்தது. சிடிஏசி அமைப்பு, சிங்கப்பூரில் இயங்கும் சிண்டா, யாயசான் மென்டாக்கி, யுரேசியர் சங்கம் உள்ளிட்ட சுய உதவிக் குழுக்களில் ஒன்றாகும்.

