2025 ஜூலையில் சிங்கப்பூருக்கு வந்த சீன மின்சார வாகன நிறுவனமான ஜேஎம்இவி, சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த தனது விற்பனை நிலையத்தை ஓராண்டிலேயே மூடியுள்ளது.
இந்நிறுவனத்தின் விநியோகிப்பாளரான ‘வேலர் ஆட்டோ’ 2024 ஜூலை 2ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு, ஓராண்டுக்குப் பிறகு இந்தக் கார் நிறுவனத்தைச் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியது. 2024 முதல் சிங்கப்பூர்ச் சந்தையில் நுழைந்த கிட்டத்தட்ட 15 சீன மின்சார வாகன நிறுவனங்களுள் ஜேஎம்இவி நிறுவனமும் ஒன்றாகும்.
விநியோகிப்பாளர் நிறுவனத்தை மூடிவிட்டால், பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்குச் சட்டபூர்வ நிவாரணம் எதுவும் இல்லை என்று வழக்கறிஞர் பர்வானி விஜய் தெரிவித்தார்.
ஜனவரி 1ஆம் தேதி முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை இந்த விநியோகிப்பாளருக்கு எதிராகத் தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை எனச் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
“வாகனத்தை வாங்குவதற்குமுன் பயனீட்டாளர்கள் நன்கு விசாரிக்குமாறு சங்கம் அறிவுறுத்துகிறது. விநியோகிப்பாளரின் கடந்தகாலச் செயல்பாடு, நற்பெயர், நிதி நிலவரம், உத்தரவாதம், விற்பனைக்குப் பிந்தைய ஆதரவின் நீண்டகால இருப்பு, விநியோக உரிமம் மூடப்பட்டால் உள்ள மாற்று வழிகள் ஆகியவற்றைச் சரிபார்ப்பதும் இதில் அடங்கும்,” என்று திரு யோங் கூறினார்.
பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்கள் உதவிக்காகச் சங்கத்தை அணுகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு கார் நிறுவனம் சந்தையிலிருந்து வெளியேறினால், பராமரிப்புச் சேவை ஆதரவைப் பொறுத்தவரை உரிமையாளர்களுக்கு வழிகளே இல்லாமல் போய்விடாது என்று நிபுணர்கள் கூறினர்.
அண்மை மாதங்களில் சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் இரண்டாவது நிறுவனம் இதுவாகும். ஷாங்காயைத் தலைமையிடமாகக் கொண்ட ஹோசன் ஆட்டோ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் சீனக் கார் நிறுவனமான நெட்டா, திறக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் 2025 ஏப்ரல் தொடக்கத்தில் தனது கடையை மூடியது.
