சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்த சீன நாட்டவர் இந்நாடு செல்வச் செழிப்பாக இருப்பதாக உணர்ந்தார்.
ஹுவாங் ஷியாவ் சொங் என்ற அந்த 41 வயது ஆடவர் 2025 டிசம்பர் 5ஆம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்தார். லிட்டில் இந்தியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், வீடுகளில் புகுந்து திருடும் திட்டத்தைத் தீட்டினார்.
செந்தோசா தீவில் உள்ள சிறப்பு அறையிலும் சிராங்கூன் பகுதியில் இருந்த இரு தனியார் வீடுகளிலும் புகுந்து கொள்ளைக் குற்றம் புரிந்த அவருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் எட்டு மாத சிறைத்தண்டனையை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) விதித்து தீர்ப்பளித்தது.
அவர் திருடிய பொருள்களின் மதிப்பு $100,000க்கும் மேற்பட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வீடுபுகுந்து கொள்ளை புரிந்த இரு குற்றங்களையும் அந்த 41 வயது ஆடவர் ஒப்புக்கொண்டார். அவர்மீது சுமத்தப்பட்டிருந்த அனுமதியின்றி நடமாடிய ஒரு குற்றம் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.
ஆள்நடமாட்டம் இல்லாத வீடுகளை அவர் குறிவைத்து அங்கு தமது குற்றங்களைச் செயல்படுத்தினார் என்று விசாரணையில் தெரியவந்தது.


