ஏழு வயதாக இருந்தபோது சுற்றியிருந்த இந்திய ஆடவர்கள் அடிக்கடி மது அருந்துவதைக் கண்டு, சீனரையோ, வெள்ளைக்காரரையோ திருமணம் செய்யலாமே என்று வேடிக்கையாக நினைத்தார் துரைசாமி ராதாபாய்.
ஆனால், பின்னாளில் சீனரையே மணந்தார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள், நான்கு பேரப்பிள்ளைகள்.
குடும்பத்தினருடன் சீனப்புத்தாண்டைக் கொண்டாடும் 74 வயது திருவாட்டி ராதாபாய், 51 ஆண்டு மணவாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூர்ந்தார்.
தியோங் பாரு வட்டாரத்தில் அவர்கள் வசித்தனர். ஆறு பெண்பிள்ளைகள். ஏழாவதாக ஓர் ஆண்பிள்ளை. ராதாபாய் ஐந்தாவது பிள்ளை.
கெப்பல் துறைமுகப் பட்டறையில் பணியாற்றிய திருவாட்டி ராதாபாயின் தந்தை, தொண்டைப் புற்றுநோயால் இறந்தார். தந்தை விட்டுச் சென்ற பணத்தில் தம் தாய்மாமனிடம் கணிசமான பகுதியை இழந்த அவரது தாயார், பிள்ளைகள் அனைவரையும் வளர்க்கப் பெரும் பாடுபட்டார்.
“தம்பி மூலமாகத்தான் என் கணவரைச் சந்தித்தேன். தம்பியைப் பார்க்க வருகிறேன் என்று அவர், உண்மையில் என்னைத்தான் பார்க்க அடிக்கடி வந்தார் என நினைக்கிறேன்,” என்றார் திருவாட்டி ராதாபாய் சிரித்தபடி.
தொடக்கநிலை 3 வரை பயின்ற திருவாட்டி ராதாபாய்க்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியாது. தமிழ் ஓரளவு வாசிப்பார்.
அதுவரையில் அவர்மீது எந்த உணர்ச்சியும் ஏற்பட்டிருக்காத திருவாட்டி ராதா பாய்க்கு ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று தமிழில் திரு ரிச்சர்ட் ஹோ எழுதிய காதல் மடல், அவரையே திருமணம் செய்யவேண்டும் என்ற உறுதியை உள்ளத்தில் ஏற்படுத்தியது.
“முதலில் என் தாயார் சம்மதிக்கவில்லை. அவர்கள் பணம் படைத்தவர்களைப்போல தெரிகிறார்கள். மேலும், தோல்நிறம் பார்ப்பார்களே,” என்று என் தாயார் மாரியம்மாள் அக்கறைப்பட்டார்.
“ஆனால் நான் உறுதியாக இருந்தேன். திருமணம் என்றால் அது அவருடன்தான், இல்லையென்றால் என்னை விட்டுவிடுங்கள். நான் உங்களுடனே இருந்துவிடுகிறேன் என்றேன்,” என்றார் அவர்.
காதலைச் சொல்லி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1974ல் குவீன்ஸ்வே முனீஸ்வரன் கோயிலில் திருமணம் நடந்தது. பிப்ரவரி 10ஆம் தேதி தமிழர் முறைப்படியும், கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு சீனமுறைப்படியும் திருமணம் நடைபெற்றது.
பழனி முருகன், திருச்சி உச்சிப்பிள்ளையார் எனப் பல ஆன்மிகத் தலங்களுக்கும் மனைவியின் பூர்விக ஊரான கதிர்காமத்திற்கும் ஆர்வத்துடன் சென்றுள்ளார் திரு ஹோ. குடும்பத்துடன் சீனக் கோயிலுக்கும் செல்வார்கள்.
சீனப் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு இரண்டையும் பின்பற்றும் குடும்பத்தினர் வீட்டில் சீன மொழி பேசுகிறார்கள். அம்மா பேசும் தமிழும் புரியும். திருவாட்டி ராதாபாய் கணவர், பிள்ளைகளுடன் தமிழிலேயே பேசுவார்.
“என் மனைவிக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும் பிடிக்கும். மிகவும் அன்பானவர். அவர் சுவையாகச் சமைத்துக் கொடுப்பார். பிள்ளைகளைச் சிறப்பாக வளர்த்திருக்கிறார்,” என்றார் மாறாத காதலோடு 73 வயது திரு ஹோ.
“ஒவ்வோர் ஆண்டும் சீனப் புத்தாண்டுக்கு முந்தைய நாளான குடும்ப ஒன்றுகூடல் விருந்துக்காக என் மனைவி சிறப்பாகச் சமைப்பார். குடும்பத்தினருடன் இணைவதில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி. அனைவரும் ஒன்றுகூடுவதற்கு மிகச் சிறந்த தருணம் பண்டிகைகள்,” என்றார் திரு ஹோ.

