தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீங்குநிரல் மோசடி: சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது

2 mins read
1a98444a-7114-4d77-931c-272bcaf0ca22
19 மில்லியனுக்கும் அதிகமான ‘ஐபி’ முகவரிகள் உலகின் ஆகப் பெரிய தீங்குநிரல் கட்டமைப்பில் பதிவானதாக அமெரிக்க நீதித் துறை கூறியது. - படம்: இணையம்

தீங்குநிரல் மூலம் பல பில்லியன் டாலர் மோசடி தொடர்பாக சிங்கப்பூரில் 35 வயது சீன நாட்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இணையக் குற்றவாளிகள் பல பில்லியன் டாலரைத் திருட வகைசெய்யும் ஊடுருவப்பட்ட கணினிக் கட்டமைப்புக்கான தீங்குநிரலை அவர் உருவாக்கிச் செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க நீதித் துறை வழிநடத்திய பன்னாட்டு அதிகார வரம்பு நடவடிக்கையின்போது வாங் யுன்ஹ என்ற அந்த ஆடவர் மே 24ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

அந்த அனைத்துலக விசாரணையில் ஈடுபட்டிருந்த சட்ட அமலாக்க அமைப்புகளில் சிங்கப்பூர் காவல்துறையும் ஒன்று.

2014ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், வாங் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டு, ‘911 எஸ்5 போட்நெட்’ எனும் தீங்குநிரலை உருவாக்கி, உலகம் முழுதும் உள்ள மில்லியன்கணக்கான இல்ல-அடிப்படையிலான ‘வின்டோஸ்’ கணினிகளுக்கு அதை அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வாங், அந்தத் தீங்குநிரலை உருவாக்கி, இணையக் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட கணினிகளுக்குள் ஊடுருவ, அவர்களிடமிருந்து பணம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுவதாக அமெரிக்க நீதித் துறையின் குற்றவியல் பிரிவின் தலைவர் நிக்கோல் ஆர்ஜெண்டியரி கூறினார்.

“இந்தக் குற்றவாளிகள் ஊடுருவப்பட்ட கணினிகளைப் பயன்படுத்தி, தங்களின் அடையாளங்களை மறைத்து, மோசடி முதல் இணையத்தில் தொல்லை கொடுப்பது வரை பல குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்,” என்றார் அவர்.

19 மில்லியனுக்கும் அதிகமான ‘ஐபி’ முகவரிகள் உலகின் ஆகப் பெரிய தீங்குநிரல் கட்டமைப்பில் பதிவானதாக அமெரிக்க நீதித் துறை கூறியது.

‘911 எஸ்5 போட்நெட்’ தீங்குநிரல், ஏறக்குறைய 200 நாடுகளில் உள்ள கணினிகளைப் பாதித்ததாகவும், அதன்வழி நிதி மோசடிகள், பிள்ளைகளைப் பயன்படுத்தி தீங்குச் செயல்களை நடத்துதல், அடையாளங்களைத் திருடுதல் உள்ளிட்ட கணினி மூலம் செய்யக்கூடிய குற்றங்கள் நடத்தப்பட்டதாகவும் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் கிறிஸ்டஃபர் ரே கூறினார்.

‘செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ்’ குடியுரிமையையும் கொண்டுள்ள வாங், 2018 முதல் 2022 ஜூலை வரை தமது கட்டமைப்பைப் பயன்படுத்திய இணையக் குற்றவாளிகளிடமிருந்து 99 மில்லியன் (S$134 மில்லியன்) அமெரிக்க டாலரைப் பெற்றதாக அமெரிக்க நீதித் துறை தெரிவித்தது.

அந்தப் பணத்தைப் பயன்படுத்தி, அவர் அமெரிக்கா, செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகியவற்றில் 21 சொத்துகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் அவருக்குச் சொந்தமான சொத்துகளில் அவர் தங்கியிருந்ததாகவும், அமெரிக்க நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

வாங் 2022ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இரண்டு நிறுவனங்களில் இயக்குநராக நியமிக்கப்பட்டதாக சிங்கப்பூர் வர்த்தகப் பதிவேடு காட்டியது.

‘கோல்ட் க்ளிக்’, ‘யுனிவெர்ஸ் கேப்பிட்டல் மேனேஜ்மண்ட்’ ஆகியவை அந்த இரண்டு நிறுவனங்கள்.

அவர் ‘இட்டர்னல் கோட்’ என்ற நிறுவனத்திலும் பங்குதாரராக இருந்தார். அந்த நிறுவனம் தற்போது செயல்பாட்டில் இல்லை. 2020ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கப்பட்ட அந்த நிறுவனம், 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பதிவேட்டிலிருந்து அகற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்