கையூட்டு வழங்கிய சீன நாட்டவர்: சிறைத் தண்டனை, பிரம்படி

1 mins read
bf5046bd-af7d-4aed-bce6-dd13f5ae45cb
குடிநுழைவு அதிகாரிக்குக் கையூட்டு வழங்கிய 39 வயது சென் குவாங்யுன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காவல்துறை அதிகாரிக்கு ஏழு மாதங்களில் $36,000 கையூட்டு வழங்கிய ஆடவருக்கு மூவாண்டு சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டவரான 39 வயது சென் குவாங்யுன், குடிநுழைவுக் குற்றங்கள் தொடர்பான வழக்கைத் தவிர்க்க சிங்கப்பூர்க் காவல்துறையின் ரகசியக் கும்பல்கள் கிளை நிலையத்தில் அதிகாரியாக இருந்த பூ செ சியாங்கிடம் கையூட்டை வழங்கினார்.

சென் தமது குற்றங்களுக்காக பெறக்கூடிய தண்டனையையும் குறைக்க உதவ முடியும் என்று பூ சென்னிடம் கூறினார்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத காவல்துறை அதிகாரியான 47 வயது பூ, பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு சிறைத் தண்டனையை நிறைவேற்றுகிறார்.

மேலும், 2022ஆம் ஆண்டு சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த சென், குடிநுழைவு தொடர்பான இரண்டு குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

2014ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி சட்டத்துக்கு உட்பட்டு சிங்கப்பூர் வந்த சென், அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் நாள்கள் இங்குத் தங்கிவிட்டார்.

2017ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி கூடுதல் நாள்கள் தங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட சென்னுக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

தண்டனை காலம் முடிந்து ஜூன் மாதம் தாய்நாட்டுக்கு அனுப்பப்பட்ட சென், சிங்கப்பூருக்குள் நுழைவதிலிருந்து தடை செய்யப்பட்டார்.

அந்தத் தடையையும் மீறி கள்ளத்தனமாக படகு மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய முற்பட்ட சென்னைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் பிடித்தனர்.

குறிப்புச் சொற்கள்