தெண்டாயுதபாணி கோயிலில் சீனப் புத்தாண்டுக் குதூகலம்

தெண்டாயுதபாணி கோயிலில் சீனப் புத்தாண்டுக் குதூகலம்

2 mins read
3d5f2598-80d4-4323-a1a3-67caa2d5df76
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகச் சட்ட மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா பங்கேற்றார். - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் சிறப்புச் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது.

செட்டியார்கள் கோயில் குழும ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்குத் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியிலிருந்து கிட்டத்தட்ட 100 மூத்த குடியிருப்பாளர்கள் வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகச் சட்ட மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா பங்கேற்றார்.

சிங்கப்பூரில் மட்டுமே இந்துக் கோயில் ஒன்றில் சிறப்பு விருந்தினரைச் சிங்க நடனத்துடன் வரவேற்று மாலை அணிவிப்பதைப் பார்க்க முடியும் என்றார் அவர். சிங்கப்பூரின் பல்லினச் சமுதாயத்தின் சிறப்பை அவர் தமது உரையில் எடுத்துரைத்தார்.

“அனைவரும் வெவ்வேறு நம்பிக்கைகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். ஆனாலும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையுடன் இருக்கிறோம், ஒன்றுபடுகிறோம்,” என்று திரு எரிக் சுவா சொன்னார்.

உலகில் அதிகரித்துவரும் கருத்து வேறுபாடுகள் பன்முகக் கலாசாரச் சமூகத்தின் அடித்தளத்தையே அசைக்கக் கூடியது என்றும் அவர் எச்சரித்தார்.

“வெவ்வேறு இனம், மொழி, சமயம், கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே மேசையில் ஒன்றாக அமர்வது சிங்கப்பூரில் நிகழும் ஒன்று,” என்றார்.

ஒன்பதாம் ஆண்டாக மூத்தோர்க்காக இந்தச் சிறப்புச் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

நிகழ்ச்சியின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபத்தில் நடைபெறும் முதல் அதிகாரத்துவ நிகழ்ச்சி இது என்று செட்டியார்கள் கோயில் குழுமத்தின் தலைவர் மாணிக்கம் நாச்சியப்பன் தெரிவித்தார்.

‘நாம் முதல்’ என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறிய கருத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த முயற்சிகள்வழி செட்டியார்கள் கோயில் குழுமம் தனது முதன்மைப் பண்பான கொடுக்கும் மனப்பான்மையைத் தொடர்ந்து பல்லினச் சமூகத்தில் நிலைநிறுத்தும்,” என்றார் அவர்.

மூத்தோர்க்கு உதவ ஏறத்தாழ 30 தொண்டூழியர்கள் இருந்தனர்.

அவர்களில் ஒருவர், பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கோயில் நிகழ்ச்சிகளில் தொண்டூழியராக இருக்கும் பூர்ணிமா வெங்கடாசலம், 26.

“எங்களின் பங்களிப்பு அதிக இளையர்களைத் தொண்டுசெய்ய ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்,” என்றார் பூர்ணிமா.

குறிப்புச் சொற்கள்