டெக் கீயில் நடந்த உற்சாகமான சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மூத்தோருக்கு ‘ஹொங் பாவ்’ வழங்கப்பட்டது.
ஞாயிறு அன்று (ஜனவரி 12) அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மூத்த அமைச்சர் லீ சியன் லூங், குடியிருப்பாளர்களுக்கு சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
கனமழையையும் பொருட்படுத்தாமல் குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
டெக் கீ சமூக மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. திரு லீ, மூத்தோருக்கு தமது கைப்பட சிவப்பு உறைகளை (ஹொங் பாவ்) வழங்கி மகிழ்ந்தார்.
அங் மோ கியோ குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு லீ, ஒவ்வொருவருக்கும் வழங்கிய சிவப்பு உறையில் $150 ரொக்கமும் ஷெங் சியோங் பேரங்காடிகளில் பயன்படுத்தக்கூடிய 50 வெள்ளி பற்றுச்சீட்டும் இருந்தன.
‘சிக்கன் எசன்ஸ்’, ஆரஞ்சுப் பழங்கள் வைக்கப்பட்ட அன்பளிப்புப் பையும் முதியோர்களுக்கு வழங்கப்பட்டது.
மேடையில் சிற்றுரையாற்றிய திரு லீ, ஆங்கிலம், மாண்டரின், மலாய் மொழிகளில் குடியிருப்பாளர்களுக்கு வளமான புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சில மூத்தோருடன் அமர்ந்து அவர் அளவளாவினார். இந்நிழ்ச்சியில் டெக் கீயின் அடித்தளத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
விழாவுக்குப் பிறகு, புளோக் 409 அங் மோ கியோ உணவங்காடி நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்களுடனும் குடியிருப்பாளர்களுடனும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தன்னை திருமதி ஷரிஃபா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், இரண்டாவது ஆண்டாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகத் தெரிவித்தார்.
“நான் இன்றைய நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என விரும்பினேன். அப்போதுதான் பலரையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்,” என்றார் அவர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அங் மோ கியோவில் குடியேறிய அவர், முதியோர்களுக்காக டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழு நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாகக் கூறினார்.
“அடுத்த ஆண்டும் இங்கு வருவேன். இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன. அருமையான உணவும் வழங்கப்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள முதியோர்களை அவர்கள் உண்மையிலேயே கவனித்துக்கொள்வதாக நான் உணர்கிறேன்,” என்று ஷரிஃபா மேலும் தெரிவித்தார்.

