சீனப் புத்தாண்டு அதிகாலை பரபரப்பு: காரைத் துரத்திச் சென்ற காவல்துறை

ஓட்டுநர் காவல்துறையால் தேடப்படுகிறார்

சீனப் புத்தாண்டு அதிகாலை பரபரப்பு: காரைத் துரத்திச் சென்ற காவல்துறை

1 mins read
சோதனைக்கு வாகனம் நில்லாமல் தடுப்புகளைக் கடந்து சென்றது
343eba78-c43e-4249-9d7f-26e666513b9c
பொங்கோலில் உள்ள எட்ஜ்டேல் பிளேனில் கார் கைவிடப்பட்டது. ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். - படம்: சமூக ஊடகம்

பாய லேபார் பகுதியில் வழக்கமாக வாகனச் சோதனையில் காவல்துறையினர் சீனப்புத்தாண்டின் முதல்நாள் இரவு ஈடுபட்டிருந்தனர்.

கேபிஇ விரைவுச் சாலையை நோக்கிய ஏர்போர்ட் ரோட்டில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) அதிகாலை 2.20 மணியளவில் ஒரு பிஎம்டபிள்யூ காரை அவர்கள் சோதனைக்கு நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.

ஆனால் ஓட்டுநர் அதன்படி வாகனத்தை நிறுத்தாமல், வேகமாக ஓட்டி தடுப்புகளைக் கடந்து சென்றுவிட்டார். உடனே காவல்துறையினர் அந்தக் காரை துரத்திச் சென்றனர்.

இறுதியாக அந்தக் கார் பொங்கோலில் உள்ள எட்ஜ்டேல் பிளேனில் புளோக் 122 A அருகில் கைவிடப்பட்டு, அதன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

ஹவ்காங் ஸ்திரீட் 12லும் ரிவர் வேல் டிரைவ் சாலையிலும், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த சிவப்பு நிறக் காரை காவல்துறையினர் துரத்திச் சென்றதை பொதுமக்கள் பார்த்ததாக ஷின்மின் சீன நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கூகல் வரைபடத்தின்படி, ஏர்போர்ட் ரோட்டிலிருந்து கார் கைவிடப்பட்ட இடத்தின் தூரம் ஒன்பது கிலோமீட்டர் என்று அறியப்படுகிறது. சிங்கப்பூர் ஆகாயப்படையின் பயிற்சி ஆணையம் அருகில் சாலைத் தடுப்புச் சோதனை நடந்த இடம் உள்ளது.

பொங்கோலில் இருந்து காலை 8 மணியளவில் கார் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்