தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்தானாவில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

2 mins read
296a309b-f1d3-4ff8-94da-07f558fce359
இஸ்தானா பொது வரவேற்பில் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவருடைய துணைவியார் ஜேன் இத்தோகி, மக்களுடன் உரையாடி மகிழ்ந்தனர். - படம்: சாவ்பாவ்

சீனப் புத்தாண்டை அதிபர் மாளிகையில் கொண்டாடுவதற்கே தனிச்சிறப்பு உள்ளது. அதுவும், அதிபரும் அவருடைய துணைவியாருடனும் கொண்டாடுவதென்றால் மக்களுக்குக் கிடைக்கும் பேரின்பத்தை சொல்லவே தேவையில்லை.

அந்த மகிழ்ச்சியை, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) அதிபர் மாளிகைக்கு வந்திருந்த பொதுமக்களின் முகங்களில் கண்கூடாகக் காணமுடிந்தது.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டிருந்த இஸ்தானா திடலுக்கு சிங்கப்பூர்வாசிகள், சுற்றுப்பயணிகள் என மொத்தம் 18,200 பேர் வருகை புரிந்தனர்.

காலையில் கடும் வெயில் இருப்பினும் மக்கள் கூட்டம் தணியவில்லை. சென்ற ஆண்டைப்போல் இவ்வாண்டு மழை குறுக்கிடவில்லை.

அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவருடைய துணைவியார் ஜேன் இத்தோகி இருவரும் காலை 10.30 மணியளவில் அதிபர் மாளிகையை வந்தடைந்தனர்.

அதிபர் தர்மன், அவருடைய துணைவியார் ஜேன் இத்தோகியைக் கண்ட களிப்பில் மக்கள்.
அதிபர் தர்மன், அவருடைய துணைவியார் ஜேன் இத்தோகியைக் கண்ட களிப்பில் மக்கள். - படம்: ரவி சிங்காரம்

அவர்கள் வந்ததும் சாரணியத் (Scouts) தொண்டூழியர்களையும் ‘நாம் ஹுவா ஓபரா’ சிறுவர் உறுப்பினர்களையும் சந்தித்தனர். அதிபர் மாளிகை முழுவதும் மொத்தம் 40 சாரணியத் தொண்டூழியர்கள் பொதுமக்களை வரவேற்றனர்.

பின்பு, தேசிய பூங்காக் கழகம் வழங்கிய அதிபர் மாளிகைத் தோட்டச் சுற்றுலாவில் பங்கேற்ற பொதுமக்களுடன் அதிபர் மாளிகையின் ஜப்பானியத் தோட்டங்களில் அதிபரும் துணைவியாரும் உரையாடினர்.

அதைத் தொடர்ந்து, மையக் கூடாரத்தில் அவர்கள் சிங்கப்பூர்க் காவல்துறை இசைக்குழுவின் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். இவ்வாண்டு அந்த இசைக்குழுவின் நூறாவது ஆண்டு நிறைவாகும். அக்குழு இதுபோன்று ஆண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகளையும் வழங்கும்.

சிங்கப்பூர்க் காவல்துறை இசைக்குழுவுடன் அதிபரும் துணைவியாரும்.
சிங்கப்பூர்க் காவல்துறை இசைக்குழுவுடன் அதிபரும் துணைவியாரும். - படம்: ரவி சிங்காரம்

பின்பு அதிபரும் துணைவியாரும் வெவ்வேறு சமூகச் சேவை அமைப்புகளின் கூடங்களைப் பார்வையிட்டனர். சிங்கப்பூர் டிஸ்லெக்சியா சங்கம், சிங்கப்பூர் உடற்குறையுள்ளோர் விளையாட்டு மன்றம், ‘ஏபிஎஸ்என்’ போன்ற கூடங்களுக்கு அவர்கள் சென்றனர். கூடங்களில் பெரும்பாலானவை, அதிபர் சவாலுக்கு நிதி திரட்டப் பொருள்கள் விற்றன.

அதிபரும் துணைவியாரும் முன்னாள் தேசிய நீச்சல் வீரர் தெரேசா கோ, தேசிய ‘பொச்சியா’ விளையாட்டு வீரர் நூரூலா‌ஷிகாவுடன் உரையாடினர்.

அதிபரும் துணைவியாரும் தேசிய ‘பொச்சியா’ விளையாட்டு வீரர் நூரூலா‌ஷிகாவுடன் உரையாடினர். 
அதிபரும் துணைவியாரும் தேசிய ‘பொச்சியா’ விளையாட்டு வீரர் நூரூலா‌ஷிகாவுடன் உரையாடினர்.  - படம்: ரவி சிங்காரம்

இவ்வாண்டு, உடற்குறையுள்ளோருக்கான நீச்சல் உலகப் போட்டி சிங்கப்பூரில் செப்டம்பர் 21 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதன்முறையாக இப்போட்டி ஆசியாவில் நடைபெறுகிறது.

அதிபரும் துணைவியாரும் ‘நாம் ஹுவா ஓபரா’வின் இசை நடனத்தைக் கண்டதும் விடைபெற்றனர்.

‘நாம் ஹுவா ஓபரா’ சிறுவர்களுடன் அதிபர் தர்மன், துணைவியார் ஜேன் இத்தோகி.
‘நாம் ஹுவா ஓபரா’ சிறுவர்களுடன் அதிபர் தர்மன், துணைவியார் ஜேன் இத்தோகி. - படம்: ரவி சிங்காரம்

அதைத் தொடர்ந்து, லாசால் கலைக் கல்லூரி, யு-லிவ் என்டியுசி, நாஃபா இளந்திறன் பள்ளி, நன்யாங் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவையும் நிகழ்ச்சிகள் வழங்கின.

அதிபர் மாளிகையைப் பற்றிய சுவாரசிய துணுக்குகள்

பத்து ஆண்டுகளாக தேசிய பூங்காக் கழகத்தில் தொண்டூழியராக இருந்து வந்துள்ள முன்னாள் பள்ளித் தலைமையாசிரியர் நடராஜா சத்தியநாதன், 70, இஸ்தானா பற்றிய சுவாரசியமான துணுக்குகளைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொண்டார்.

“ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த 1,800 இந்தியக் குற்றவாளிகளே, இன்று இஸ்தானா என்றழைக்கப்படும் அன்றைய அரசாங்க இல்லத்தைக் கட்டினர் என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

“இஸ்தானாவின் மைய வாயிற்கதவின் அருகே ஒரு ‘டைகர் ஆர்க்கிட்’டும் உள்ளது. அது ஆண்டுக்கு ஒருமுறைதான் பூக்கும். அது இப்பொழுது பூத்துள்ளது. பெரிய பூ,” என்றார் திரு சத்தியநாதன்.

இஸ்தானாவில் திரண்ட மக்கள்.
இஸ்தானாவில் திரண்ட மக்கள். - படம்: சாவ்பாவ்
குறிப்புச் சொற்கள்