தலைமைப் பேருந்து ஓட்டுநர் சங் எங் தியோங் சீனப் புத்தாண்டின் முந்தைய நாள், முதல் நாள், இரண்டாம் நாள் என தொடர்ந்து மூன்று நாள்களுக்கும் பணிபுரிய கடந்த 14 ஆண்டுகளாக முன்வந்துள்ளார்.
ஊழியர்களின் போக்குவரத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அவர், இரவு முழுவதும் பணியாற்றுகிறார். பேருந்து ஓட்டுநர்களின் வேலை முடிந்ததும் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதும், காலையில் அவர்களை வேலைக்குக் கொண்டுசெல்வதும் அவரது பணி.
தமது சக வெளிநாட்டு ஊழியர்கள் அடிக்கடி சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லமுடியாததால், அவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவழிப்பதற்கு வாய்ப்பு வழங்கவே 48 வயதான அவர் அவ்வாறு செய்கிறார்.
பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) காலை எஸ்எம்ஆர்டியின் பீஷான் பணிமனையில் சந்தித்துப் பேசிய கிட்டத்தட்ட 180 பொதுப் போக்குவரத்து ஊழியர்களில் திரு சங்கும் ஒருவர்.
என்டியுசி தலைவர் கே. தனலட்சுமி, என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் ஆகியோருடன் பிரதமர் வோங், ரயில் ஓட்டுநர்கள், நிலைய மேலாளர்கள், பராமரிப்புத் தொழில்நுட்பர்கள், பொறியாளர்கள் ஆகியோருக்கு அன்பளிப்புப் பைகளை வழங்கினார்.
ஒவ்வோர் அன்பளிப்புப் பையிலும், இரண்டு ஆரஞ்சுப் பழங்கள், பிரதமரிடமிருந்து ஒரு வெப்பக்குடுவை (thermal flask), என்டியுசியிடமிருந்து சிவப்பு உறையில் $10 ஆகியவை இருந்தன.
ஊழியர்களின் வேலைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, பணிமனையைச் சுற்றிப் பார்த்தபோது பிரதமர் வோங் அவர்களிடம் பேசினார். அவர்களின் கடின உழைப்புக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இறுதியாக, கிட்டத்தட்ட 70 ஊழியர்களுடன் அவர் ‘லோஹெய்’ ஒன்றுகூடலில் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
எஸ்எம்ஆர்டி தலைவர் சியா மூன் மிங்கும் எஸ்எம்ஆர்டி குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி நிஞென் ஹூன் பிங்கும் அந்தச் சந்திப்பை வழிநடத்தினர்.
தேசியப் போக்குவரத்து ஊழியர்கள் தொழிற்சங்கத் தலைவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். தலைவர் சஸாலி சஃபீ, பொதுச் செயலாளர் மாக் முன் வாய், என்டியுசி உதவித் தலைமைச் செயலாளரும் தேசியப் போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கத்தின் நிர்வாகச் செயலாளருமான இயோ வான் லிங் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
இதற்கிடையே, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுவதற்காகத் தொடர்ந்து பணியில் இருக்கும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு திரு இங் சீ மெங், என்டியுசி வெளியிட்ட செய்தி அறிக்கையின்வழி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

