சீனப்புத்தாண்டு காலக்கட்டத்தில் நிலச்சோதனைச்சாவடி வழியாக மலேசியா செல்வோர், குடிநுழைவுச் சோதனைகளை நிறைவுசெய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படலாம் எனக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் திங்கட்கிழமை (ஜனவரி 20) தெரிவித்தது.
இதற்காகத் தங்களை முன்கூட்டியே தயார்ப்படுத்திக்கொண்டு வருமாறு பொதுமக்களை ஆணையம் அறிவுறுத்தியது.
ஜனவரி 24ஆம் தேதிக்கும் பிப்ரவரி 2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் துவாஸ், உட்லண்ட்ஸ் நிலச்சோதனைச்சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என அது மேலும் கூறியது.
சீனப் புத்தாண்டின் முதல் நாள் ஜனவரி 29ஆம் தேதி வருகிறது.
கடந்த ஆண்டிறுதி பள்ளி விடுமுறைக்காலத்தில் கிட்டத்தட்ட 24 மில்லியனுக்கும் அதிகமானோர் அவ்விரு சோதனைச்சாவடிகளையும் கடந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2023ஆம் ஆண்டின் ஆண்டிறுதி பள்ளி விடுமுறையுடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகம்.
2024ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி சாதனை அளவாகக் கிட்டத்தட்ட 562,000க்கும் அதிகமான மக்கள் ஒரே நாளில் நிலச்சோதனைச்சாவடிகளைக் கடந்து சென்றதாக ஆணையம் சொன்னது.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி 553,000க்கும் மேற்பட்டோர் நிலச்சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தியதாகவும் அது மேலும் கூறியது.

