தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட சிங்கப்பூர் மாணவர்

2 mins read
5dfa9c3c-0bc2-4359-9b98-c4a7ea665dc3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் கலைக் கல்லூரி ஒன்றில் படித்து வரும் சீனநாட்டு மாணவர் ஒருவர், கம்போடியாவில் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளார். அரசாங்க அதிகாரி போல் பாசாங்கு செய்யும் மோசடிக்கு ஆளான அந்த மாணவர் பாதுகாப்பாக இருப்பதாக சிங்கப்பூரின் சீனத் தூதரகம் தெரிவித்தது.

சிங்கப்பூர் உட்பட பலநாட்டுச் சட்ட அமலாக்க அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் மாணவரை மீட்க முடிந்ததாகவும் தூதரகம் குறிப்பிட்டது.

மாணவரின் பெற்றோர் பணம் ஏதும் இழக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

கடந்த 2ஆம் தேதியன்று மோசடிக்காரர்கள் மாணவருடன் தொடர்புகொண்டு அந்த மாணவர் அதிகாரிகளால் தேடப்பட்டு வருவதாகக் கூறினர்.

அதனால் கம்போடியாவின் கரையோர நகரான சியனக்வில்லுக்கு விமானத்தில் சென்று தலைமறைவாக இருக்குமாறு மோசடிப் பேர்வழிகள் அந்த மாணவரிடம் கூறினர்.

ஆனால் அவ்விடத்தை அந்த மாணவர் அடைந்ததும் மோசடிக் கும்பல் அவரைப் பிடித்து வைத்துக்கொண்டதுடன் அவரின் பெற்றோருக்காக காணொளி ஒன்றையும் பதிவு செய்தனர்.

அந்தக் காணொளியை மாணவரின் பெற்றோருக்கு அனுப்பி 3 மில்லியன் யுவான் (S$562,000) தந்தால் விடுவிப்பதாகக் கூறி மிரட்டினர்.

அதையடுத்து ஜூன் 4ஆம் தேதியன்று மாணவரின் பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்தனர். சிங்கப்பூரின் சீனத் தூதரகம் அதையடுத்து கம்போடியாவின் சீனத் தூதரகத்துடன் தொடர்புகொண்டு உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணியில் இறங்கத் திட்டமிட்டனர்.

மறுநாளான ஜூன் 5ஆம் தேதியன்று கம்போடிய காவல்துறை அதிகாரிகள் மாணவரைக் கண்டுபிடித்து மீட்டனர்.

இதற்கிடையே மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை காக்குமாறு இங்கு படிக்கும் சீனநாட்டு மாணவர்களுக்கு சிங்கப்பூரின் சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூர் அதிகாரிகள் எவ்வேளையிலும் தொலைபேசிவழி தனிநபர் தகவல்களைக் கேட்கமாட்டார்கள் என்றும் அறிமுகமில்லாத தொடர்பு எண்ணிலிருந்து அழைப்பு வரும்போது ஒருவர் தனது பெயர், முகவரி, குடும்பச் சூழல், வங்கி விவரங்கள் போன்ற தகவல்களைக் கூறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தென்கிழக்காசியாவில் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படும் ஆள்கடத்தல் கும்பல்களிடம் பத்தாயிரக்கணக்கானோர் சிக்குகின்றனர் என்ற 'இன்டர்போல்' விடுத்துள்ள எச்சரிக்கைக்கு அடுத்து இச்சம்பவம் நடந்துள்ளது.

முதலீட்டு மோசடி, காதல் மோசடி, இணையச் சூதாட்டம் போன்ற வெவ்வேறு மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் பலரும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் உயர் தகுதியுடையவர்கள், பல்கலைக்கழகப் பட்டங்கள் வைத்திருப்பவர்கள், தகவல் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்கள் போன்றோரை இந்த மோசடிக் கும்பல்கள் குறிவைக்கப்பதாகவும் கூறப்படுகிறது.

மோசடி மையங்கள் கம்போடியாவில் அதிகம் இயங்கி வருவதாகவும் லாவோஸ், மியன்மார் ஆகிய நாடுகளிலும் சில மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அரசாங்க அதிகாரி போல் பாசாங்கு செய்யும் மோசடிச் சம்பவங்கள் 771.

குறிப்புச் சொற்கள்
மாணவர்மோசடி