சிங்கப்பூருக்கு முதன்முறையாக வந்த சீனச் சுற்றுப்பயணி ஒருவரின் ‘லூயி விட்டோன்’ பை கரையோரப் பூந்தோட்டத்தில் திருடப்பட்டது.
இருப்பினும், திருடிச் சென்றதாகக் கூறப்படும் ஆடவரைப் பின்தொடர்ந்து, 20 நிமிடங்களுக்குள் அவர் தமது பையை மீட்டார்; ஆனால், அதற்குள் இருந்த சில பொருள்கள் காணாமல் போயிருந்தன.
‘லாவ் ஹெய் லைவ்ஃப்ரீ’ என்ற பயனர் சியாவ்ஹொங்ஷு சமூக வலைத்தளப் பக்கத்தில், “இது உண்மையிலேயே ஓர் அசாதாரணமான பயணம். நான் முதன்முறையாக வெளிநாடு சென்றது, என் சொந்த நாட்டை விட்டே முதன்முறையாக வெளியேறியது, சிங்கப்பூருக்கு வந்ததும் இதுவே முதல்முறை. ஆனால், நான் இங்கே கொள்ளையடிக்கப்பட்டு விட்டேன்!” என்று பதிவிட்டிருந்தார்.
அவர் பதிவிட்ட புகைப்படங்களில், காவல்துறை அதிகாரி ஒருவருடன் அவர் கரையோரப் பூந்தோட்டத்தைச் சுற்றி வருவதையும் காவல்துறை அதிகாரிகள் மூவர் விபத்து நடந்த இடத்தில் அவரிடம் பேசி, அவரது சொகுசுப் பையைக் கையாள்வதையும் காண முடிந்தது.
சம்பவம் குறித்து மேல் விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்ட அட்டை ஒன்றையும் காவல்துறையினரிடமிருந்து அவர் பெற்றார்.
திருட்டில் ஈடுபட்ட ஆடவர் தனியாகச் செயல்படவில்லை என்றும் அவர் ஒரு கும்பலின் உறுப்பினராக இருந்திருக்கலாம் என்றும் தாம் நம்புவதாக லாவ் ஹெய் லைவ்ஃப்ரீ கூறினார்.
தாம் பிடித்த நபர் பையைத் திருடிய நபராக இருக்க வாய்ப்பில்லை என்றும் திருடப்பட்ட பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே அவர் அங்கு சென்றிருக்கக்கூடும் என்றும் தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
