சீனாவின் துணைப் பிரதமர் டிங் சுவேசியாங் ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் (நவம்பர் 22, 23) சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
ஆண்டுதோறும் இடம்பெறும் உயர்நிலைச் சந்திப்பில் சிங்கப்பூர்த் துணைப் பிரதமர் கான் கிம் யோங்குடன் பங்கேற்க அவர் இங்கு வருகிறார்.
தலைவர்கள் இருவரும் இருதரப்பு ஒத்துழைப்புக்கான 22வது கூட்டு மன்றச் (ஜேசிபிசி) சந்திப்புக்குத் தலைமை தாங்குவர். இது, தற்போதைய ஒத்துழைப்பை மறுபரீசீலனை செய்வதற்கும் வருங்கால ஒத்துழைப்பை வரைவதற்குமான தளம்.
மேலும், அரசாங்கங்களுக்கு இடையிலான மூன்று முதன்மைத் திட்டங்களின் முன்னேற்றத்தையும் அவர்கள் ஆராய்வர். சூச்சுவோ தொழிற்பேட்டை, தியான்ஜின் பசுமை நகரம், சோங்சிங் தொடர்புத் திட்டம் ஆகியவை அந்தத் திட்டங்கள். சிங்கப்பூரின் பிரதமர் அலுவலகம் இத்தகவலை வெளியிட்டது.
இவ்வாண்டுக்கான ஜேசிபிசி சந்திப்புக்கான கருப்பொருள் ‘புதிய வாய்ப்புகளுக்காக ஒன்றாகப் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்வது’ (Innovating Together for New Opportunities) என்பதே. இது, இருதரப்பும் பலனடைய ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதிலும் வளர்ச்சிக்கான புதிய அம்சங்களை ஆராய்வதிலும் இருநாடுகள் கொண்டுள்ள கடப்பாட்டை எடுத்துக்காட்டுவதாகப் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.
சிங்கப்பூரின் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான திரு கான், திரு டிங்குடன் இருதரப்புச் சந்திப்பை நடத்துவார். திரு கான் திங்கட்கிழமை திரு டிங்கிற்கு மதிய உணவு விருந்தளிப்பார்.
பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோரையும் திரு டிங் சந்திப்பார்.
