குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டவரான 28 வயது சுன் ஹாய் லுன்மீது ஊழல் தடுப்புக் குற்றச்சாட்டு புதன்கிழமை (நவம்பர் 18) சுமத்தப்பட்டது.
தமது நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதற்குப் பதிலாக சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கும்படி செப்டம்பர் 17ஆம் தேதி அந்த அதிகாரிக்கு அவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்பட்டது.
கொடுக்கப்பட்ட லஞ்சத் தொகை எவ்வளவு என்பதையும் சம்பவம் நடந்த இடத்தையும் நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை. அந்த அதிகாரி லஞ்சத்தை மறுத்ததுடன், அந்த வழக்கு லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொள்ளப் போவதாக சுன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவரது வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரியின் நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்த லஞ்சம் வழங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு $100,000 வரை அபராதம், ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஊழலை முற்றிலும் பொறுத்துக்கொள்ள இயலாத அணுகுமுறையைச் சிங்கப்பூர் கடைப்பிடிப்பதால், பெயர் குறிப்பிடப்படாத புகார்கள் உட்பட ஊழல் தொடர்பான அனைத்துப் புகார்களும் விசாரிக்கப்படும் என லஞ்ச, ஊழல் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
