சிங்கே அணிவகுப்பு 2026: முதல்முறையாகப் பங்கேற்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

சிங்கே அணிவகுப்பு 2026: முதல்முறையாகப் பங்கேற்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

3 mins read
c9b45cd8-021f-4d8c-aa21-63ac1057e294
இந்திய நடனமணிகளுடன் நடன அமைப்பாளர் சுரேந்திரன். - படம்: கீர்த்திகா ரவீந்திரன்
multi-img1 of 2
Google News Preferred Icon
ஹர்வினி ரேணுகா, 29.
ஹர்வினி ரேணுகா, 29. - படம்: சாவ்பாவ்

ஈராண்டுகளுக்கு முன்பு முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் சிறிது காலத்துக்கு நடனமாட முடியாமல் தவித்ததாகக் கூறினார் ஹர்வினி ரேணுகா, 29.

தாயார் அளித்த ஊக்கத்தால் இவ்வாண்டுச் சிங்கே அணிவகுப்பில் ஹர்வினியும் நடனமாடுகிறார்.

“சிறிது காலத்துக்குப் பிறகு ஒரு பெரிய நிகழ்ச்சியில் நடனம் ஆடுவது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று தமிழ் முரசிடம் அவர் குறிப்பிட்டார்.

மூன்று வயதிலிருந்து நடனமாடி வரும் ஹர்வினி தன் தாயார் தனக்குப் பேருந்துதலாக விளங்குவதாகக் கூறினார்.

“என் அம்மாவும் ஒரு நடனக் கலைஞர். அவருடன் இணைந்து சிங்கே அணிவகுப்பில் பங்கேற்பது ஓர் இனிமையான உணர்வு,” என்றார் அவர்.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஹர்வினி தான் அவர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க விரும்புவதாகச் சொன்னார்.

“உங்கள் கனவுகளுக்கு இடையில் எந்தத் தடையையும் அனுமதிக்காதீர்கள்,” என்று இளம் கலைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார் இந்த நடனமணி.

பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரயிறுதியில் நடைபெறவிருக்கும் சிங்கே அணிவகுப்பை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) ஒரு சிறப்பு முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

‘பேஃபிரன்ட்’ எம்ஆர்டி நிலையத்தில் தொடங்கிய ‘சிங்கே ஆன் த கோ’ (Chingay On The Go) எனும் அந்த நிகழ்ச்சி பொதுமக்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து டோபி காட் எம்ஆர்டி நிலையம், ‘ஸ்கேப்’ வளாகம் என மாலை 6 மணி வரை ‘சிங்கே ஆன் த கோ’ நிகழ்ச்சி இடம்பெற்றது.

பயணிகள் சிலர் சிங்கே ஆடைகளை அணிந்தவாறு சிங்கே கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பயணிகள் சிலர் சிங்கே ஆடைகளை அணிந்தவாறு சிங்கே கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

பல்லினக் கலைஞர்கள் கிட்டத்தட்ட 20 பேர், இரண்டு ஆடல் தொகுப்புகளை வழங்கினார்கள். பயணிகள் சிலர் சிங்கே ஆடைகளை அணிந்து, அந்தக் கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சீனப் பாரம்பரியத்தின் அதிர்ஷ்ட தேவதையான ‘சைஷன்’ வேடம் பூண்டிருந்த கலைஞருடன் படம் எடுத்துக்கொண்ட  பயணிகள்.
சீனப் பாரம்பரியத்தின் அதிர்ஷ்ட தேவதையான ‘சைஷன்’ வேடம் பூண்டிருந்த கலைஞருடன் படம் எடுத்துக்கொண்ட பயணிகள். - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

சீனப் பாரம்பரியத்தின் அதிர்ஷ்ட தேவதையான ‘சைஷன்’ வேடம் பூண்டிருந்த கலைஞருடன் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சிங்கே அணிவகுப்பில் இடம்பெறவுள்ள இந்திய அங்கத்தில் மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற கலாசாரப் படைப்புகளை ஏறத்தாழ 450 பேர் படைக்கவிருக்கின்றனர் என்று தெரிவித்தார் நடன அமைப்பாளர் சுரேந்திரன், 40.

“இம்முறை கிட்டத்தட்ட இரு மடங்கு எண்ணிக்கையிலான கலைஞர்களுக்கு நடன அமைப்பு செய்தது ஒரு புதிய அனுபவம்,” என்றார் அவர்.

அத்துடன், இந்திய அங்கத்தில் ஒளி விளக்குகளை அதிகம் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

சிங்கே அணிவகுப்பில் முதல்முறையாக வெளிநாட்டு ஊழியர்கள்

சிங்கே அணிவகுப்பில் இவ்வாண்டு வெளிநாட்டு ஊழியர்கள் இந்திய நடனம் படைக்கவிருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

“சிங்கே பல்வேறு கலாசாரங்களின் நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்துவது மிக அற்புதமானது,” என்று இவ்வாண்டு அணிவகுப்பில் பங்கேற்கும் வெளிநாட்டு ஊழியர் மனோரஞ்சின், 31, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த மனோரஞ்சின், இந்தியாவில் நடன அமைப்பாளராகப் பணியாற்றியவர்.

“பொதுவாக ​​இந்தியக் கலாசாரம் சார்ந்த நடனங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தோம்,” என்றார் அவர்.

அவருடன் நடனமாடும் அவரது உறவினர் சுபின் லால், 30, “இதற்காகக் கடந்த சில மாதங்களாகக் கடுமையாகப் பயிற்சி செய்துவருகிறோம். இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்கள் மையத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டின் சிங்கே அணிவகுப்பில் பங்கேற்பர்.

‘ஆசை’ எனும் கருப்பொருளில் பிப்ரவரி 27, 28ஆம் தேதிகளில் நடைபெறும் சிங்கே அணிவகுப்பில் 3,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கேநடனம்வெளிநாட்டு ஊழியர்பிப்ரவரி