ஜேஜு ஹோட்டலில் பரவிய குளோரின் வாயு; 80க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

ஜேஜு ஹோட்டலில் பரவிய குளோரின் வாயு; 80க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

படம்: ஃபைனான்‌‌ஷியல் டைம்ஸ்

01 Oct 2026 - 9:46 pm

2 mins read

சோல்: தென்கொரியாவின் ஜேஜூ தீவில் உள்ள கிரேண்ட் ஜோசுன் ஜேஜு ஹோட்டலில் குளோரின் வாயு பரவியதை அடுத்து ஹோட்டலில் தங்கியிருந்தோர், ஊழியர்கள் உட்பட 59 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை (அக்டோபர் 1) நேர்ந்த அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர், மயக்கம், குமட்டல் போன்ற பிற அறிகுறிகளை உணர்ந்தனர்.

ஹோட்டலில் உள்ள அனைத்து தளங்களிலும் பிளீச் வாடை வருவதாக காலை 10.40 மணியளவில் அழைப்புவந்ததாக ஜேஜு தீயணைப்புப் பாதுகாப்புத் தலைமையகம்தெரிவித்தது.

சியொக்விப்போ என்ற பகுதியில் உள்ள ஜங்மன் சுற்றுலா வளாகத்தில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு 10.53 மணியளவில் சென்ற தீயணைப்பு அதிகாரிகள், அங்குத் தங்கியிருந்த 85 பேரையும் வெளியேற்றினர்.

சம்பவ இடத்தில் தற்காலிக மருத்துவ நிலையத்தை அமைத்த அதிகாரிகள், 59 பேரை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். யாருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

ஹோட்டலின் முதல் தளத்தில் உள்ள நீச்சல் குளத்தைச் சுத்தம் செய்த ஊழியர்கள் கிருமிநாசினியை அதில் கலந்தபோது சம்பவம் நேர்ந்ததாகக் கண்டறியப்பட்டது.

அளவுக்கு அதிகமான கிருமிநாசினி சேர்க்கப்பட்டதால் குளோரின் வாயு உற்பத்தியாகி ஹோட்டல் முழுதும் பரவியதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஒருசிலர் ஹோட்டல் நிர்வாகம் நடந்துகொண்ட விதம் குறித்து குறைகூறினர்.

ஹோட்டலில் தங்கியிருந்தோர் உடனடியாக வெளியேற்றப்படவில்லை என்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருந்தபோதும் வருகையாளர்களுக்கு அவை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எனினும், ஹோட்டலிலிருந்து வெளியேறும்படி வழங்கப்பட்ட அறிவிப்புகளைக் குளியறை, நீராவிக் குளியலறை ஆகியவற்றில் இருந்தோரால் கேட்க முடியாமல் போனது என்று ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்தது.

குறிப்புச் சொற்கள்
வாயுக்கசிவுஹோட்டல்தென்கொரியாவருகையாளர்பாதிப்பு