சுவா சூ காங்கில் ஐந்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் லாரி ஓட்டுநர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. விபத்துச் சம்பவம் டிசம்பர் 31ஆம் தேதி நடந்தது.
விபத்து சுவா சூ காங் வே, சுவா சூ காங் நார்த் 7 சாலை சந்திப்பில் நடந்தது.
விபத்து தொடர்பாக தங்களுக்குப் பிற்பகல் 3 மணியளவில் தகவல் வந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
மூன்று லாரிகள், ஒரு வேன், ஒரு கனரக வாகனம் ஆகியவை விபத்தில் சிக்கின.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றபோது லாரியில் ஓட்டுநர் ஒருவர் சிக்கியிருந்தார். அவரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
விபத்தில் சிக்கிய இரு லாரி ஓட்டுநர்களும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

