சுவா சூ காங் நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவால் ஊழியர் இருவர் உயிரிழந்த சம்பவத்தின் தொடர்பில், சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்மீது வியாழக்கிழமை (ஜூலை 16) குற்றம் சாட்டப்பட்டது.
பணியிடப் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததாக ‘ஸ்டார்குரூப்’ நிறுவனத்தின்மீது குற்றம் சாட்டப்பட்டது.
2024 மே 23ஆம் தேதி அந்த நிறுவனம், அதன் துணைக் குத்தகை நிறுவனம் இரண்டையும் சார்ந்த ஊழியர் நால்வர், நீர்ச் சுத்திகரிப்புத் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் மூவர் சுருண்டு விழுந்ததால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் இருவர் முறையே மே 24, 28ஆம் தேதிகளில் உயிரிழந்தனர். மூன்றாமவர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியதாக மனிதவள அமைச்சு கூறியது.
அவர்கள் ‘ஹைட்ரஜன் சல்ஃபைடு’ நச்சுவாயுவைச் சுவாசித்தது விசாரணையில் தெரியவந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.
ஊழியர்களுக்கு உரிய வேலையிடப் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியதன் தொடர்பில் ‘ஸ்டார்குரூப்’ நிறுவன மேலாளர் லிம் பெங் ஹொக்மீது 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்டு 13ஆம் தேதி விசாரணைக்கு வரும்.
இதர அமலாக்க நடவடிக்கைகள்
இச்சம்பவம் தொடர்பில், பொதுப் பயனீட்டுக் கழக அதிகாரி ஒருவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதிசெய்யத் தவறியதாக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், இதற்குமுன் சில சம்பவங்களில், தடை செய்யப்பட்ட, காற்றோட்டம் இல்லாத பகுதிகளுக்குள் சிறிது நேரம் சென்றுவர ஊழியர்களை அனுமதித்ததன் தொடர்பில் பொதுப் பயனீட்டுக் கழகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
சம்பவத்தை அடுத்து அந்த ஆலையில் தடை செய்யப்பட்ட பகுதிகள் அனைத்திலும் காற்றோட்ட வசதி இருப்பதை உறுதிசெய்திருப்பதாகக் கழகம் கூறியது.

