ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரத்தில் புக்கிட் பாஞ்சாங் வீவக வீட்டின் அடித்தளம் ஒன்றில் கிட்டத்தட்ட 20 பேர் சிவப்பு நிற ஆடைகளில் கூடியிருந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை சார்ந்த உடைகள் அணிந்திருந்த அவர்கள் இசைக் கருவிகளோடு காணப்பட்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே பலரின் நினைவுக்கு வருவது சாண்டா கிளாஸ் தாத்தா கதாபாத்திரம் தான்.
கூடியிருந்த குழுவில் ஒருவர் சாண்டா கிளாஸ் போலவும் இதர நபர்கள் தேவதைகள், ராஜாக்கள், ஆடு மேய்ப்பவர்கள் போலவும் உடை அணிந்திருந்தனர்.
அந்த 20 பேரும் உட்லண்ட்ஸில் இருக்கும் செயிண்ட் அந்தோணி தேவாலயத்தின் இசை குழுவைச் சேர்ந்தவர்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் நான்கு நாள்கள் தேவாலயத்தின் உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்துமஸ் கீதங்களைப் பாடி இசைமழையில் நனைய வைத்தனர்.
கடைசி நாளான டிசம்பர் 14ஆம் தேதியன்று கூடிய அவர்கள் முதலில் திருவாட்டி ஷெர்லி ஜெனிஃபர், 44, வீட்டிற்கு சென்றிருந்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தனது இல்லக் கதவுகளை இசை குழுவினருக்கு திறந்து வைத்து வரும் திருவாட்டி ஷெர்லிக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் இரட்டிப்பு மகிழ்ச்சி.
தொடர்புடைய செய்திகள்
புது வீட்டில் முதல் முறையாகக் கிறிஸ்துமஸ் கொண்டாடும் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ஒவ்வொரு பண்டிகை காலத்தின்போதும் இசை குழுவினரை வீட்டிற்கு அழைப்பதை பண்டிகையின் முக்கிய அங்கமாகக் கருதுகின்றனர்.
“ஏசுவின் பிறப்பைக் குறிக்கும் ஒரு முக்கிய நாள் கிறிஸ்துமஸ். அந்த நாளை வரவேற்க வீட்டிற்கு பாடல் குழுவை அழைக்கும் போது வீட்டில் கிறிஸ்துமஸ் உணர்வு களைகட்டுகிறது,” என்றார் திருவாட்டி ஷெர்லி.
இசைக் குழுவைச் சேர்ந்த 20 பேருக்கும் அவரின் வீட்டில் தடபுடலான ஏற்பாடுகள் நடைபெற்றன.
வீடு கிறிஸ்துமஸ் உணர்வில் திளைப்பது போன்ற அலங்காரம், குழுவினரை உபசரிக்கும் வகையில் பலகாரங்கள் போன்றவை திருவாட்டி ஷெர்லியின் வீட்டில் காத்திருந்தன.
பாடல்களைப் பாடி முடிக்கும் தருவாயில் அனைவரும் ஆரவாரத்தோடு தோளோடு தோள் நின்று ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
சாண்டா கிளாஸ் போல உடை அணிந்திருந்த அருண் குமார் சேசுராஜ், 35, கடந்த எட்டு ஆண்டுகளாக இசைக் குழுவில் ஈடுபட்டு வருகிறார்.
சாண்டாவைப் போல வேடமிட்டு அனைவரையும் இன்புறச் செய்ய விரும்பும் அருண் பாடல்கள் பாடி முடித்ததும் வீட்டினுள் நுழைந்து அனைவரையும் தனது வேடிக்கை சாகசங்கள் மூலம் மகிழ வைக்கிறார்.
“சாண்டா கிளாஸ் போல வேடமிட்டு பலரை சிரிக்க வைப்பது கடினமான ஒன்றாக இருந்தாலும் நான் அதை என் விருப்பத்தின் அடிப்படையில் தான் செய்கிறேன்,” என்று புன்முறு[Ϟ]வலு[Ϟ]டன் சொன்னார் அருண்.
இசைக் குழுவில் இளம் வயதிலிருந்து இருக்கும் மெர்ரிஷ் ஜோன்ஸ் சுதாகர், 19, மெரிலின் ஜோன்ஸ் சுதாகர், 16, சகோதரர்கள் இசைக் குழுவில் இருக்கும் உறுப்பினர்களை இரண்டாவது குடும்பம் போலக் கருதுகின்றனர்.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தங்கள் பெற்றோருடன் இடம்பெயர்ந்த அவர்கள் சிங்கப்பூருக்கு முதலில் வந்தபோது தனிமையில் இருந்தது போல உணர்ந்தனர்.
“இசைக் குழுவில் சேர்ந்த பின்னர் பலருடன் அறிமுகம் ஏற்பட்டது. உறுப்பினர்களுடன் இணைந்து பல இல்லங்களைப் பாடல்கள் மூலம் மகிழ வைப்பதில் நானும் என் தங்கையும் இன்பம் காண்கிறோம்,” என்று கூறினார் மெர்ரிஷ்.
புக்கிட் பாஞ்சாங், கென்பரா, உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களில் மொத்தம் ஏழு வீடுகளுக்கு இசைக் குழுவினர் சென்றிருந்தனர். இரவு 10.30 மணியளவில் அவர்கள் வீடுகளுக்குச் சென்று முடித்தனர்.
சுயதொழில் செய்து வரும் ஷார்லி அலெக்சாண்டர், 53, இசைக் குழுவின் வருகைக்காகக் கென்பராவில் இருக்கும் தனது தோழியின் வீட்டில் தனது குடும்பத்தினரோடு ஆவலுடன் காத்திருந்தார்.
இசைக் குழுவினர் வருவதற்கு முன்னர் அவரது தோழி வின்சென்ட் ஆக்னஸ் எவாஞ்சலின், 50, வீட்டில் பலகாரங்களின் மணம் வீசத் தொடங்கின.
“கிறிஸ்துமஸ் காலத்தின் போது பாடகர்கள் வீட்டிற்கு வந்து இயேசுவைப் போற்றி பாடல்கள் பாடுவது எங்களின் மனதிற்கு திருப்தி அளிக்கும். என் மகளும் அந்தக் குழுவில் இருக்கிறார். பிறருடன் இணைந்து அவளும் பாடும் போது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்று தெரிவித்தார் வின்சென்ட் ஆக்[Ϟ]னஸ் எவாஞ்சலின்.
இந்தியர்கள் இணைந்து தமிழ் மொழியில் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிய இக்குழுவில் 11 வயதுச் சிறுவன் லின் ஜுன்யு காணப்பட்டான்.
தனது அண்டை வீட்டில் வசிக்கும் தோழி அரோக்கியடோஸ் அக்சிலியாவுடன், 14, இணைந்து பாடல்களைப் பாடி மகிழ்ந்த ஜுன்யு சீன இனத்தைச் சேர்ந்தவர்.
அக்சிலியாவுடன் மிக நெருக்கமான நட்புறவு வைத்துள்ள ஜுன்யு சிறு வயதிலிருந்தே பண்டிகை நேரங்களில் அக்சிலியாவின் குடம்பத்துடன் பலகாரங்களைப் பரிமாறுவது வழக்கம்.
முன்பு அக்சிலியாவின் வீட்டிற்கு இசை குழுவினர் வந்து கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிய தருணத்தைக் கண்ட ஜுன்யுவுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
“இந்த முறை நான் ஜுன்யுவை என்னுடன் பாட அழைத்தேன். அவன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடாமல் இருந்தாலும் எங்களுடன் இணைந்து இந்நாளில் கலந்துகொள்வதை பார்க்கப் பெருமையாக உள்ளது,” என்றார் அக்சிலியா.

