அண்மையில் 85ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடிய கிறிஸ்து சேகர சபையில் டிசம்பர் 24 புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையில் சிங்கப்பூரர்கள், மலேசிய நாட்டவர், வெளிநாட்டு ஊழியர்கள் என ஏறத்தாழ 300க்கும் அதிகமானோர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
மறுநாள் கிறிஸ்துமஸ் அன்றும் காலை தொடங்கி நண்பகல்வரை கிறிஸ்து சேகர சபையில், தமிழ், ஆங்கிலம், பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் ஆராதனையில் ஏறத்தாழ 700 பேர் பெருந்திரளாகக் கலந்துகொண்டு ஒரே சமூகமாகத் தேவாலயத்தில் வழிப்பட்டனர்.
தேசம், மொழி கடந்து நூற்றுகணக்கானோர் பங்கேற்ற இந்தச் சிறப்பு பிரார்த்தனையில் ‘’மானுடத்தின் மீது இறைவன் காட்டிய கருணையின் கொண்டாட்டம்’ எனும் தலைப்பில் கிறிஸ்துமஸ் சிறப்புச் செய்தியை வழங்கினார் ஆலயத்தின் தலைமைப் போதகர் அருள்திரு ஸ்டீவன் ஆசீர்வாதம்.
‘‘உலகில் அண்மையில் நடைபெற்று வரும் பல விஷயங்கள் மனத்தில் பெருங்கவலைகளைத் தந்துகொண்டிருக்கின்றன. இவ்வேளையில், கிறிஸ்து பிறப்பைக் கொண்டாட ஒன்றுகூடிய இந்த நன்னாளில், மக்களைக் காக்க இறைவன் மறப்பதில்லை எனும் நல்வார்த்தை புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது,’’ என்று திரு ஜான், 39, என்பவர் கூறினார்.
‘‘குடும்பம் இங்கில்லை என்றாலும், பணி நிமித்தம் அறிமுகமானவர்களுடன் சேர்ந்து இந்தக் கிறிஸ்துமஸ் ஆராதனையில் பங்கேற்றிருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து பங்கேற்பது பண்டிகை உணர்வில் மேலும் திளைக்கச் செய்கிறது,’’ என்றார் தம் நண்பர்களுடன் வந்திருந்த வெளிநாட்டு ஊழியர் திரு ராஜ், 28.
வேலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி எனத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து சிங்கப்பூரில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஏராளமான வெளிநாட்டு ஊழியர்களும் கிறிஸ்து சேகர சபையின் கிறிஸ்துமஸ் ஆராதனையில் பங்கேற்றனர்.
தாயகம் கடந்து வந்திருந்தாலும் தமிழில் பிராத்தனை நடத்தப்படுவதால், அதில் பங்கேற்று இறையருள் பெறுவது தனித்துவ அனுபவம் என்று அவர்கள் கூறினர்.

