ஆடவர்க்கு அழகு வேலையில் சிறப்பது என்று சமூகம் கருதினாலும் கடுமையாக உழைப்பவர்க்கு ஓய்வின் அருமையைப் புரிந்துகொள்வது அவசியம்.
ஒரு கட்டத்தில் உற்சாகத்தாலும் வேட்கையாலும் அளவிற்கு அதிகமாக உழைத்து பக்கவாதத்திற்கு ஆளான திரு பிரகாஷம் தங்கவேலு, 51, தற்போது வாழ்வில் சமநிலையைப் பேணக் கற்றுக்கொண்டார்.
“முறையான ஓய்வின்றி, ஓயாமல் உழைத்துக்கொண்டே இருப்பேன். நிதானத்துடன் நடந்துகொள்ளும்படி மனைவி அறிவுறுத்தியபோதும் நான் செவிசாய்க்கவில்லை,” என்று திரு பிரகாஷ் கூறினார்.
இப்போதெல்லாம் கிறிஸ்துமஸ் நேரத்தின்போது தம் நலனின்மீது அக்கறை கொண்டுள்ள குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பொழுதைக் கழித்து அன்பைப் பொழிகிறார்.
“எல்லாப் பண்டிகைகளையும் நான் கொண்டாடுவேன்,” என்று சிரித்தவாறே கூறினார் திரு பிரகாஷ்.
“நான் இந்து. பிலிப்பீன்சைச் சேர்ந்த என் மனைவி கிறிஸ்துவர். எனவே, கிறிஸ்துமஸ் பண்டிகையும் எனக்கு முக்கியமான பண்டிகையாக அமைகிறது,” என்று அவர் கூறினார்.
பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு, ஒரு காலத்தில் தேசிய குத்துச்சண்டை வீரராக இருந்த திரு பிரகாஷ், உயரமான, வலிமையான நல்ல உடல்வாகு கொண்டவராகத் தோற்றமளிக்கிறார்.
மேல்நிலைத் தேர்வுக்குப் பிறகு தேசிய கல்விக் கழகத்தில் பயின்ற திரு பிரகாஷ், தொடக்கத்தில் ஆசிரியராக இருந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தேசிய தொழிற்சங்க காங்கிரசில் தொழில்துறைப் பயிற்சி அதிகாரியாகச் செயல்படுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இளவயது முதலே காற்றின் வீச்சாய்த் துடிப்புடன் இருந்த திரு பிரகாஷ், ஈராண்டுகளுக்குமுன் எதிர்பாராத விதமாக நிலைக்குத்திப்போன சம்பவத்தை தமிழ் முரசுக்கு அளித்த பேட்டியின்போது நினைவுகூர்ந்தார்.
2022ல் உடற்பயிற்சிக் கூடத்தில் தம் உடலின் வலப்பக்கம் திடீரென்று மரத்துப் போனதை உணர்ந்த திரு பிரகாஷ் பதற்றமடைந்தார். அப்போது அவருக்கு வயது 49.
அங்கு மயங்கி விழுவதற்கு முன்னதாக மருத்துவ உதவிக்கு அழைக்கும்படி திரு பிரகாஷ் தம்முடன் இருந்த நண்பருக்குத் தெரிவித்ததாகக் கூறினார்.
ரத்தக்கசிவு பக்கவாதம் (hemorrhagic stroke) ஏற்பட்ட நிலையில், தன்னால் இனி நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறியதை நினைவுகூர்ந்தபோது திரு பிரகாஷின் விழிகளில் நீர் துளிர்த்தது.
மூன்று மாதங்களாக மருத்துவமனையில் இருந்தபின் வீடு திரும்பினார் அவர். சக்கர நாற்காலியில் இருந்தவண்ணம் வீடு திரும்ப மறுத்த திரு பிரகாஷ், விடாமுயற்சியுடன் இயன்மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு நடந்தபடியே வீடு திரும்பினார்.
வேலையிடம், குடும்பம், நண்பர் வட்டம் ஆகிய மூன்றுமே இத்தகைய துயரங்களிலிருந்து மீள்வதற்குத் தேவைப்படும் தோணிகள் என்கிறார் திரு பிரகாஷ்.
“குறிப்பாக, என் மனைவியின் சகோதரி, கிட்டத்தட்ட மூன்று மாதகாலத்திற்கு தம் வேலையிலிருந்து விடுப்பு எடுத்து, என் பெற்றோர்களுடனும் மனைவியுடனும் இணைந்து என்னைப் பார்த்துக்கொண்டதை வாழ்நாளில் மறக்கவே முடியாதது,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
இருமுறை திருமணம் செய்துகொண்ட திரு பிரகாஷுக்கு நான்கு பிள்ளைகள் (இருவர் இரண்டாவது மனைவியின் முன்னைய திருமணத்தைச் சேர்ந்த பிள்ளைகள்) உள்ளனர்.
பண்டிகைக் காலத்தைக் கணவருடனும் பிள்ளைகளுடனும் இனிமையாகக் கொண்டாடும் திருவாட்டி ரிஸாலி, 42, தம் கணவரின் தற்போதைய முன்னேறிய நிலைக்காக இறைவனிடம் நன்றி கூற விரும்புவதாகத் தெரிவித்தார்.
“பதினைந்து ஆண்டுகளாக நாங்கள் இருவரும் தம்பதியராக உள்ளோம். என் கணவர் மிகவும் பலசாலி. அவரைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். அவரது நீண்ட ஆயுளுக்காக நான் இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்கிறேன்,” என்றார் திருவாட்டி ரிஸாலி.