நூறாண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்தக் கிறிஸ்துமஸ்

2 mins read
ad813207-e210-499a-a91f-cb87755fb22c
வத்திகன் ஊழியர்களைச் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கூறும் திருத்தந்தை லியோ XIV - படம்: அன்ஸா

நாட்காட்டி காட்டும் இன்றைய தேதி 25-12-25. இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் அரிய தேதி வரிசையில் வந்துள்ளது. தேதியும் ஆண்டின் கடைசி இலக்கமும் ஒரே மாதிரியாக இருக்கும் இந்த நாள் நூறாண்டுக்கு ஒருமுறை மட்டுமே பார்க்கக் கிடைக்கும். இதுவே 2025ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் இன்னொரு சிறப்பு. 

இதுகுறித்துத் தமிழ் முரசிடம் கருத்துரைத்த வெளிநாட்டு ஊழியரான திரு பிரபாகரன், 29, மறுமுறை இது நிகழ்வதைப் பார்க்க நம்மில் பெரும்பாலானோர் இருக்க மாட்டோம். ஆயினும் இப்போது இதைக் கண்முன் காண்பதில் மகிழ்ச்சி என்றார்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் இயேசு கிறிஸ்து பிறந்த இடமாகக் கருதப்படும் பெத்லஹேமில் வண்ணவிளக்குகளால் ஒளிர்ந்த கிறிஸ்துமஸ் மரம்.

உலகையே உலுக்கிய காசா போர் நிகழ்ந்த காலம் துவங்கி ஒளியூட்டப்படாமல் இருந்த இந்தக் கிறிஸ்துமஸ் மரம், அண்மைப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் ஒளியூட்டப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக நிலவிய அமைதியின்மை அகன்று, சமாதானத்தை நோக்கி ஜெருசலம் நகர் நடைபோடத் தொடங்கியதன் அடையாளமாக வரலாற்றுச் சிறப்புமிக்க நேட்டிவிட்டி தேவாலயத்தின் முன்பு பலத்த ஆரவாரத்திற்கு இடையே பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரம் ஒளியூட்டப்பட்டது.

‘‘கிறிஸ்துவர்களின் புனித நகரமாகக் கருதப்படும் ஜெருசலத்தில் இயல்பு நிலை திரும்பிக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறுவதைப் பார்க்கையில், உலகில் மனிதநேயம் தழைப்பதற்கான நம்பிக்கை வலுவாகியுள்ளது,’’என்றார் சிங்கப்பூரரான திருவாட்டி கிறிஸ்டினா, 57.

வரலாறு படைத்த அமெரிக்க கார்டினலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து:

உலகக் கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்தும் போப்பாக இந்த ஆண்டு மே மாதம் தெரிவுசெய்யப்பட்டார் அமெரிக்காவைச் சேர்ந்த திருத்தந்தை லியோ XIV.

அமைதிக்கும் அன்பிற்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த கிறிஸ்துவின் வாழ்வை அனைவரும் கடைப்பிடியுங்கள் என்ற கோரிக்கையை வாழ்த்தாக முன்வைத்துள்ளார் அவர்.

இரக்கம், மகிழ்ச்சி ஆகியவற்றில் காலஞ்சென்ற திருத்தந்தை போப் பிரான்சிஸ் கொண்டிருந்த அக்கறையை எடுத்துக்காட்டிய போப் லியோ XIV, திருச்சபைகளின் அருட்பணி ஒருபோதும் அதிகாரத்துவக் கட்டமைப்புக்குள் முடங்கிவிடக் கூடாது என்றும் துடிப்புமிக்கதாகத் திகழ வேண்டும் என்றும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்