கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக, ஆர்ச்சர்ட் ரோடு விழாக்கால விளக்குகளுடனும் அலங்காரங்களுடனும் தயாராகியுள்ளது.
கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று அங்கு சென்று பொருள்கள் வாங்கத் திட்டமிருந்தால், முதலில் கூட்ட அளவை மின்னிலக்க வரைபடம் ஒன்றில் பார்த்துக்கொள்ளலாம்.
வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஆர்ச்சர்ட் ரோடு செல்ல விரும்புவோர் ‘Crowd@OrchardRoad’ வரைபடத்தைப் பார்க்குமாறு காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது.
அந்தந்த நேரத்தில் உள்ள கூட்ட அளவு, விழா கொண்டாட்டங்களுக்கு மூடப்பட்டிருக்கக்கூடிய பகுதிகள் ஆகியவற்றை அதில் தெரிந்துகொள்ளலாம்.
அந்த வரைபடத்தை, டிசம்பர் 24ஆம் தேதி மாலை 5 மணி முதல் பார்க்கலாம். ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட சில நுழைவாயில்களும் வெளிவழிகளும் மூடப்பட்டிருக்கும் என்று காவல்துறை கூறியது.
சாமர்செட் ரயில் நிலையம் அல்லது மற்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குத் தொல்லை ஏற்படுத்துவோர் அல்லது சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கூறியது.
சில சாலைகள் டிசம்பர் 24 மாலை 6 மணிமுதல் டிசம்பர் 25 பின்னிரவு 2 மணிவரை மூடப்பட்டிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
ஆர்ச்சர்ட் ரோடு (ஸ்காட்ஸ் ரோடுக்கும் பைட்ஃபொர்ட் ரோட்டுக்கும் இடையே), ஸ்காட்ஸ் ரோட்டிலிருந்து ஆர்ச்சர்ட் ரோடுக்குள் செல்லும் இணைப்புச் சாலை, ஆர்ச்சர்ட் ரோடு நோக்கிச் செல்லும் மவுண்ட் எலிசபெத் சாலை ஆகியவையே அவை.
பாதிக்கப்பட்ட அனைத்துச் சாலைச் சந்திப்புகளிலும் துணைக் காவல் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர்.