கிறிஸ்துமஸ் பண்டிகையின் முந்தைய நாளான புதன்கிழமையன்று (24 டிசம்பர்) தீவெங்கும் கொண்டாட்ட உணர்வு தென்படத் தொடங்கியது.
ஹெண்டர்சனில் அமைந்துள்ள ‘தி கிரௌன்’ எனும் இடத்தில் ‘ஜீசஸ் லிவ்ஸ் சர்ச்’ திருச்சபையைச் சேர்ந்தோர் இந்தக் களிப்பில் திளைத்தனர்.
நம்பிக்கையின் இசைக் கீதங்களும், இயேசுவை போற்றும் பாடல்களும் பாடப்பட்டு கொண்டாட்டத்திற்கு வலுசேர்த்தன.
கண்ணைப் பறிக்கும் ஒளிவிளக்குகள், மின்னும் அலங்காரங்களால் ஜொலித்த கிறிஸ்துமஸ் மரம், திருச்சபையினர் பரிமாறிக்கொள்வதற்கான பரிசுப்பொருள்கள் உள்ளிட்டவற்றால் இடமே களைகட்டியது.
பாடகர் குழுவின் கிறிஸ்துமஸ் கீதங்களுடன் உற்சாகமாகத் தொடங்கிய சிறப்புக் கொண்டாட்டத்தில் பங்கேற்றோர், தோளோடு தோள் நின்று கைகளை ஏந்தியவாறு இயேசுவைப் போற்றி இறையுணர்வில் மூழ்கினர்.
சிறாரிலிருந்து, மூத்தோர் வரை பல குடும்பங்கள் கலந்துகொண்ட கொண்டாட்டத்தில் சகோதரத்துவமும் நட்பும் நிறைந்திருந்தன.
தலைமைப் போதகர் ஜோனத்தான் சுப்பையா இயேசுவின் பிறப்பை குறிக்கும் நன்னாளான கிறிஸ்துமஸ் தினத்தின் பொருளைக் கொண்டாட்டத்திற்கு வந்தோரிடம் விளக்கினார்.
இயேசுவின் பிறப்பை நினைவுகூர்ந்த திருச்சபையினர் கிறிஸ்துமஸ் பண்டிகை என்றால் பிறருக்குக் கொடுப்பது என்பதைப் பறைசாற்றும் வகையில் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டு அன்பைப் பொழிந்தனர்.
கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி கிறிஸ்துமஸ் பாடல்களுக்கு அவர்கள் கைகளை அசைத்தது கொண்டாட்டத்தில் முத்தாய்ப்பாக அமைந்தது.

