கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள், மக்கள் கூட்டம் அதிகரித்த வேளையில் ஆர்ச்சர்ட் ரோட்டில் தனியாக நடந்துவந்தார் பிரேம், 46.
2013ஆம் ஆண்டில் ரத்தப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் வென்ற அவர், தனிமையின் அரவணைப்பு பிடித்தமான ஒன்று என்று தெரிவித்தார்.
“கிறிஸ்துமசுக்குத் தனியாக ஆர்ச்சர்ட் ரோட்டுக்கு வந்து பண்டிகைக்காலக் கொண்டாட்டங்களில் மூழ்குவது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்றார்.
‘கீமோதெரபி’ சிகிச்சை மிகவும் சவாலாக இருந்தது என்று சிரித்தபடியே தனது தலையைச் சுட்டிக்காட்டினார் பிரேம்.
“நான் என் புற்றுநோயைத் தனியாகத்தான் எதிர்த்துப் போராடினேன். அதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தனியாகக் கொண்டாடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்றார்.
தனிமையிலே இனிமையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்கக் கடைசி நிமிடப் பரிசுகளை வாங்குவதற்காக ஆர்ச்சர்ட் ரோட்டில் வேகமாகச் சென்றனர் ருமைஸா, ஹரித் என்ற இரு நண்பர்கள்.
“ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் நண்பர்களுக்குச் சில விளையாட்டுப் பொருள்களையும் சாவிகளை வைத்துக்கொள்ளும் சங்கிலிகளையும் வாங்க வந்தோம்,” என்றார் ருமைஸா.
மேலும் கேக், பலகாரங்களைச் செய்பவரான ஹரித், விடுமுறைக் காலத்தில் தனது நண்பர்களுக்காகச் சுவையான தின்பண்டங்கள் செய்வதை ரசிப்பதாகவும் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நான் எப்போதும் என் நண்பர்களுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை விரும்புகிறேன்,” என்றார்.
இவ்விரண்டு நண்பர்களையும் போலக் கடைசி நிமிடப் பரிசுகளுக்காக மலேசியாவிலிருந்து வந்துள்ளார் இஸ்மாயில், 29.
தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் முதன்முறை சிங்கப்பூருக்கு வந்திருந்த அவர், சிங்கப்பூரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன என்றார்.
“மிகப்பெரிய தள்ளுபடிகள் இருப்பதால் கடைசி நிமிடத்தில் பரிசுகள் வாங்க விரும்புகிறோம்,” என்றார்.
ஆண்டிறுதித் தள்ளுபடிகள் பல இருந்தாலும் கோஷல், 70, போன்ற மூத்தோர் ஆர்ச்சர்ட் ரோட்டுக்கு வருவது பண்டிகைக்கால மகிழ்ச்சியில் திளைக்கத்தான். “ஆர்ச்சர்ட் ரோட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வித்தியாசமாக, உற்சாகமானவையாக உள்ளன,” என்று அவர் கூறினார்.
கடந்த 40 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் ஆர்ச்சர்ட் ரோட்டுக்குத் தன் நண்பர்களுடன் வருகிறார் கோஷல்.
“இன்று, எங்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை. இந்த நாள் நம்மை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலோடு இங்கு வந்தோம்,” என்று அவர் புன்னகையுடன் கூறினார்.

